அண்ணன், தம்பி இருவரும் ஒன்றாக உயிரிழந்த சோகம்!!

323

திருப்பத்தூர் மாவட்டத்தில் டீசல் காலியாகி விட்டதால் சாலையில் நின்றுக் கொண்டிருந்த ஈச்சர் லாரியின் மீது அதிவேகத்தில் வந்துக் கொண்டிருந்த பைக் மோதியதில், பைக்கில் வந்த அண்ணன் தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அத்திமரத்துபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுடி. இவரது மகன்கள் ராஜேஷ் (54) ரமேஷ் (50). இருவரும் அந்த பகுதிகளில் பிளம்பிங் வேலைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பத்தூருக்கு பிளம்பிங் வேலைக்காக சென்றிருந்த இவர்கள் இருவரும் வேலையை முடித்துவிட்டு நேற்று முன் தினம் இரவு திரும்பவும் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரிக்கு திரும்பிச் சென்றுக் கொண்டிருந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் கிருஷ்ணகிரிக்கு லாரியில் ஜல்லி ஏற்றிக் கொண்டு செல்லும் போது, வழியில் டீசல் காலியாகி கந்திலி அருகே உள்ள கள்ளேரி பகுதியில் லாரி நடுவழியில் நின்றது.

இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்து கொண்டிருந்த ராஜேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது அதி வேகமாக மோதியதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த கந்திலி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலைக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் ஈச்சர் லாரியின் பின்புறம் மோதி அண்ணன் தம்பிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.