ஒரே அறையில் தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்!!

200

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் ஒரே அறையில் தாய், மகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து தகவலறிந்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆதிச்சநல்லூர், மேல தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். ஓய்வு பெற்ற தலையாரி.

இவரது மனைவி முத்தம்மாள்(65). இந்த தம்பதிகளுக்கு மந்திரமூர்த்தி (40), சின்னத்துரை (30) என்ற 2 மகன்கள் உள்ளார். இதில் சின்னத்துரை கொத்தனார் கையாளாக வேலை பார்த்து வந்தார்.

சண்முகம் சில வருடங்களுக்கு இறந்துவிட்ட நிலையில் முத்தம்மாள் தனது மகன்களுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் முத்தம்மாள் வீடு நேற்று திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் திருவைகுண்டம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கே முத்தம்மாள் அவரது மகன் சின்னத்துரை இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் 2 பேரின் சடலங்களையும் கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், புதிய வீடு கட்டுவதற்காக முத்தம்மாள் வங்கியில் லோன் வாங்கி இருந்தாராம். ஆனால் அந்த லோனை திருப்பி செலுத்த முடியவில்லை.

இதனால் வங்கியில் இருந்து நெருக்கடி கொடுக்கவே முத்தம்மாள் மனம் உடைந்து தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

அப்போது வீட்டுக்கு வந்த சின்னத்துரை தாய் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வந்துள்ளது.

கடன் தொல்லையால் தாயும், மகனும் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.