கர்நாடக மாநிலத்தில் மைசூர் மாவட்டம் விஸ்வேஸ்வரய்யா நகரின் வித்யாரண்யபுராவில் உள்ள சங்கல்ப் என்ற அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 62 வயது பிரியம்வதா தனியாக வசித்து வந்தார்.
அவருக்கு அடுத்த வீட்டில் அவரது மகன் சேத்தன் (45), அவரது மனைவி (43) மற்றும் அவர்களின் மகன் குஷால் (15) ஆகியோர் வசித்து வந்தனர்.
சேத்தன் ஹாசனில் உள்ள கோரூரைச் சேர்ந்தவர், அவரது மனைவி மைசூருவைச் சேர்ந்தவர். சேத்தன் ஒரு இயந்திர பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.
2019ல் மைசூருவுக்கு மாற்றப்படுவதற்கு முன் துபாயில் பணிபுரிந்தவர். தற்போது ஆன்லைனில் சௌதிக்கு தொழிலாளர்களை அனுப்பும் ஒப்பந்தகாரராக பணியில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், குடும்பத்தினர் அனைவரும் நேற்று கோரூரில் உள்ள கோவிலுக்குச் சென்று வந்துள்ளனர். பிறகு வீட்டில் ஏதோ நடந்ததை அடுத்து அனைவரும் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சேத்தன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து பின்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் தடயவியல் அறிவியல் ஆய்வகம் மற்றும் குற்றவியல் அதிகாரியின் குழு ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களின் ஆய்வு முடிவுகளுக்கு பிறகு இது தற்கொலையா இல்லை கொலையா என்பது குறித்து தெரியவரும் என்கின்றனர் போலீசார்.