கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உணவில் விஷம் கலந்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் சிவகாசியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே திருத்தங்கள் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் லிங்கம்.
இவர் தேவதானத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பழனியம்மாள் சுக்கிவார்பட்டியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவர்கள் மகள் ஆனந்தவல்லி, மகன் ஆதித்யா, 2 மாத பேத்தி சசிகா ஆகியோருடன் வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை.
சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, லிங்கம் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் மற்றும் ஆனந்தவள்ளி, ஆதித்யா, சசிகா ஆகியோர் பிணமாக கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 5 பேரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடல்கள் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டன. ‘ லிங்கம், 40க்கும் மேற்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளார். மீண்டும் கடனை திருப்பி செலுத்துமாறு கடன் கொடுத்தவர்கள் வற்புறுத்தி வந்துள்ளனர்.
இதை சரி செய்ய, தனக்கு வர வேண்டிய சொத்தை பிரித்து தரும்படி, தந்தையிடம் வலியுறுத்தி வந்துள்ளார். அவரது தந்தை சொத்தை பிரிக்க மறுத்து விட்டார்.
இதனால், குடும்பமே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது’ என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடன் பிரச்சனையால் இரண்டு மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.