ஒரு பள்ளியில் மொத்தம் 120 இரட்டையர்கள் படித்து வருவதால் ஆசிரியர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான பஞ்சாப், ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 60 இரட்டை குழந்தைகள் என்று மொத்தமாக 120 இரட்டையர் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரட்டையர்களின் எண்ணிக்கை 47 ஆக இருந்த நிலையில் தற்போது உயர்ந்துள்ளது.
இதுகுறித்து பள்ளியின் முதல்வர் ரஷ்மி விஜ் கூறுகையில், “எங்களுடைய பள்ளியில் மொத்தம் 120 இரட்டையர் மாணவர்கள் படித்து வருகின்றனர். நாங்கள் இரட்டையர் மாணவர்களை இங்கு வந்து சேருங்கள் என்று கேட்கவில்லை. இது எங்களுக்கே ஆச்சரியமான தகவல் தான்.
அதேபோல் அவர்களுக்கு நாங்கள் சலுகைகளை வழங்கவில்லை. அணைத்து மாணவர்களுக்கும் பொதுவான கட்டணம் தான்” என்றார்.
இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பேசுகையில், “எங்களிடம் படிக்கும் பல இரட்டையர்களில் ஒரு பிள்ளைக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பைப் பெற்றோர் தருவதாகப் புகார் அளிப்பார்கள். ஆனால், நாங்கள் அவர்களை தனி தனி வகுப்புகளில் படிக்க வைத்துள்ளோம்” என்றார்.
மேலும், இந்த மாணவர்களை அடையாளம் காண்பதற்கு ஆசிரியர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. அதேபோல, மாணவர்களிடத்திலும் இந்த குழப்பம் இருப்பதாக கூறுகின்றனர்.
யார் என்று அடையாளம் காண முடியாமல் பெயர்களை மாற்றி மாற்றி ஆசிரியர்கள் அழைக்கின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே ஒரு சிறப்புத் திட்டத்தை பள்ளி அமல்படுத்தி இருக்கிறது.
அதாவது, இரட்டையர்களை ஒரே வகுப்பறையில் படிக்க அனுமதிக்காமல் தனித் தனிப் பிரிவில் போட்டுவிடுகிறார்கள். இதனால், ஓரளவிற்கு குழப்பத்தை கட்டுப்படுத்த முடிகிறது என்கிறார்கள்.