டெல்லியைச் சேர்ந்த கஃபே உரிமையாளர் புனித் குரானா தனது மனைவியுடன் விவாகரத்து கோரி நடந்து வரும் சட்டப் போராட்டத்தின் மத்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இவர் நேற்று மாலை கல்யாண் விஹாரில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் வெளியிட்ட 54 நிமிட வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
புனித் குரானா 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணமானதில் இருந்தே கணவன்-மனைவி இடையே தகராறு இருந்து வந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மனைவியைப் பிரிந்து தந்தை வீட்டுக்குச் சென்றார் புனித். இதற்கிடையே இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் இருவரும் சொத்து பிரச்னை குறித்து பேசிய 2 நிமிட ஆடியோவும் வைரலாகி வருகிறது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக புனித் மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், செவ்வாய்கிழமை மதியம் புனித் தூக்கில் தொங்கியதை குடும்பத்தினர் பார்த்துள்ளனர். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக முழு விசாரணை நடைபெற்று வருகிறது. புனித்தின் மொபைலை போலீசார் கைப்பற்றினர்.
புனித் குரானா தற்கொலைக்கு முன் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த விவகாரம் பெரும் கவனம் பெற்றது.
24 பக்க தற்கொலைக் கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தனது தற்கொலைக் குறிப்பில் விவாகரத்து வழக்கை தீர்த்து வைக்க ரூ.5 லட்சம் கேட்டதாகவும் எழுதி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.