கடன் தொல்லை மனைவி, மகனுடன் விஷம் குடித்து ஜவுளி வியாபாரி தற்கொலை!!

126

கம்பம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த நிலையில் காருக்குள் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தில் கம்பம்மெட்டு சாலை அருகே மங்கத்தான் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் தெற்கு பகுதியில் மானாவாரி காடு உள்ளது. இந்த காட்டின் வழியாக நேற்று காலையில் தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர்.

அப்போது அங்கு வெகுநேரமாக கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று நின்றது. இதைக்கண்ட தொழிலாளர்கள் கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளையராஜா, செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் கார் கண்ணாடி வழியாக உள்ளே பார்த்தனர்.

அப்போது காருக்குள் வாயில் நுரை தள்ளியபடி பெண் உள்பட 3 பேர் பிணமாக கிடந்தனர். மேலும் காருக்கு அருகில் ஏலக்காய் தோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி கொல்லி மருந்து பாட்டில் கிடந்தது. இதனால் 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

இதற்கிடையே அங்கு வந்த தடயவியல் நிபுணர்களும் கார் அருகே கிடந்த பூச்சி மருந்து பாட்டில், கார் நின்ற பகுதி, கார் எந்த திசையில் இருந்து வந்தது மற்றும் கார் நின்றிருந்த பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரம் வரை உள்ள தடயங்களை சேகரித்தனர்.


மேலும் காரின் கதவுகள் பூட்டப்பட்டுள்ளதா? என திறந்து ஆய்வு செய்தனர். அப்போது காரின் ஒரு கதவு உள்புறம் பூட்டப்படாமல் இருந்தது. இதையடுத்து கதவை திறந்து காரில் இருந்த 3 பேர் மற்றும் அவர்கள் வைத்திருந்த பொருட்களை மீட்டு ஆய்வு செய்தனர்.

அதில் காரில் இருந்த செல்போன், ஆதார் கார்டை துருப்பு சீட்டாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் இருந்தவர்கள் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் (60), அவரது மனைவி மெர்சி (58), மகன் அகில் (29) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஜார்ஜ் கோட்டயம் மாவட்டத்தில் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் அவர் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை கட்ட முடியாமல் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகினார்.

இதனை தினமும் தனது மனைவி, மகனுடன் சொல்லி புலம்பி வந்துள்ளார். பின்னர் கடன் தொல்லை தாங்க முடியாமல் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அப்போது ஊரை விட்டு சென்றாலும் கடன் கொடுத்தவர்கள் விடமாட்டார்கள் என எண்ணிய அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

இதனால் கடந்த 12-ம் தேதி கேரளாவில் பூச்சி கொல்லி மருந்தை வாங்கிவிட்டு அங்கிருந்து குடும்பத்துடன் காரில் புறப்பட்டனர். பின்னர் தமிழக பகுதி கம்பத்திற்கு வந்த அவர்கள் காரில் இருந்தவாறே தாங்கள் வாங்கி வந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.