சமூக வலைதளங்களில்..
இளம்பெண் ஒருவர் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காதல் கடிதத்தை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
கெய்லி பாவல் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இயங்கிவருபவர். இவர் சமீபத்தில் அருகில் உள்ள நிதி திரட்டும் அமைப்பு நடத்திவரும் கடைக்கு சென்றிருக்கிறார். அப்போது ஒவ்வொரு பகுதியிலும் அடுக்கப்பட்டிருந்த பொருட்களை பாவல் பார்வையிட்டிருக்கிறார்.
அப்போது அங்கிருந்த வண்ணமயமான பொருள் ஒன்று அவருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. உடனடியாக அவர் அதனை கையில் எடுத்தபோது அதனை அவராலேயே நம்பமுடியவில்லை. காரணம் 10 வருடங்களுக்கு முன்னர் அவர் தனது காதலனுக்கு எழுதிய காதல் கடிதம் அது.
இதனால் ஆச்சர்யப்பட்டுப்போன பாவல் அதனை வாங்கிக்கொண்டு உடனடியாக வீட்டுக்கு திரும்பியுள்ளார். கடிதத்தின் மீது தீட்டப்பட்ட வர்ணங்களை அவர் சுரண்டியபோது உள்ளே அவர் எழுதியிருந்த காதல் வரிகள் வெளியே தெரிந்திருக்கின்றன. இதனை அவர் சமூக வலை தளங்களிலும் பதிவிட்டிருக்கிறார்.
அந்த கடிதத்தில் பாவல்,”நாம் உருவாக்கிய நினைவுகள், நாம் பகிர்ந்து கொண்ட காலைப் பொழுதுகள் மற்றும் நான் பெற்ற அன்பு விலைமதிப்பற்றது. நீ என்னுள் எதை கண்டறிந்தாய் என்பது தெரியவில்லை. என்னிடம் ஏன் இவ்வளவு அன்பாக இருக்கிறாய் என்பதும் விளங்கவில்லை.
ஆனால், அதற்கு நான் தகுதியுடையவளாக இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. உன்னை எனக்கானவன் என அழைப்பது பெருமகிழ்ச்சியை உருவாக்குகிறது. இதற்குப் பிறகு இன்னும் ஆயிரம் ஆண்டு விழாக்கள் இருக்கும் என்று நம்புகிறேன். இது எனது பழைய வாழ்க்கையின் முடிவு மற்றும் எனது புதிய வாழ்க்கையின் தொடக்கமாகும் என்று நம்புகிறேன்.
வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு நான் உன்னை நேசிக்கிறேன். அது ஒருபோதும் மாறாது என்று நம்புகிறேன். நீ என் இரட்சிப்பின் கலங்கரை விளக்கம். நீ என் இரவு வானில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் என் சிறந்த நண்பன். நான் உன்னை நேசிக்கிறேன். கெய்லி” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த உணச்சிகரமான கடிதம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.