கணவனின் குடும்பத்தையே தீர்த்துக் கட்டிய பெண்… வெளியான அதிர்ச்சி தகவல்!!

378

சென்னையில்..

நெட்பிளிக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியான Curry & Cyanide டாக்குமெண்ட்ரி பெரும் பேசுபொருளானது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின் கூடத்தாய் பகுதியில் ஒரே குடும்பத்தில் நடைபெற்ற தொடர் கொலைகளை மையாக வைத்து இது தயாரிக்கப்பட்டிருந்தது.

சொத்து மற்றும் இரண்டாவது திருமணத்திற்காக இரண்டு வயது குழந்தை உட்பட 6 குடும்ப உறுப்பினர்களை சயனைடு வைத்து கொலை செய்த ஜாலி ஜோசப் என்ற பெண்ணின் கதையாகும். தற்போது இதே போன்ற ஒரு சம்பவம் தான் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த படப்பை பகுதியைச் சேர்ந்தவர் 76 வயதான சுப்பராயன். அதிமுக பிரமுகரான இவருக்கு பத்மினி என்ற மனைவியும் செந்தில்குமார், ராஜ்குமார் என இரண்டு மகன்கள். இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆன நிலையில், சொத்துக்களை இரண்டு மகன்களுக்கும் பிரித்து தந்துள்ளார் சுப்பராயன். இதில் ராஜ்குமாருக்கு கொடுக்கபட்ட சொத்து படப்பை பிரதான சாலையில் இருந்ததால் கடைகளை கட்டி வாடகைக்கு கொடுக்க தயாராகி வந்தார்.


இதனால் ஆத்திரமடைந்த அண்ணன் செந்தில்குமாரின் மனைவி மேனகா, அந்த இடத்தைக் கேட்டு கணவனிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்த செந்தில்குமார் கடந்த 2018 ஆம் ஆண்டு தம்பி ராஜ்குமாரை அவரது வீட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இதனால் வீட்டில் தனியாக இருந்த மேனகாவை செந்தில்குமாரின் நண்பரான ராஜேஷ் கண்ணா என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே கள்ள காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 3 மாதங்கள் சிறையில் இருந்த செந்தில்குமார் விடுதலை ஆகி வீட்டிற்கு வந்தபோது அக்கம்பக்கத்தினர் அவரின் மனைவி ராஜேஷ் கண்ணாவுடன் தொடர்பில் இருப்பது குறித்து அரசல் புரசலாக தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் தனது மனைவியிடமும் இது குறித்து கேட்ட போது நாங்கள் நட்பாக தான் பழகி வந்தோம் என அப்பாவி போல் நாடகமாடியுள்ளார்.

இந்நிலையில் சில நாட்கள் கழித்து திடீரென செந்தில்குமார் காணாமல் போனார். எங்கு தேடியும் அவர் கிடைக்காத நிலையில், தாய் பத்மினி மணிமங்கலம் காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என புகார் அளித்தார் புகாரை பெற்றுக் கொண்டு காவல்துறையினர் வழக்கம் போல் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந்நிலையில் திடீர் அதிர்ச்சியாக காணாமல் போன செந்தில்குமாரின் தந்தை சுப்பராயன் நரியம்பாக்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். கொலை செய்த மூவரும் மணிமங்கலம் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.

ஒரு மகன் இறந்துவிட்டார், கணவர் சுப்பராயன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார், மற்றொரு மகன் செந்தில்குமார் காணாமல் போய் விட்டார். இதனால் கடும் துயரத்தில் ஆழ்ந்த தாய் பத்மினி மகன் செந்தில்குமாரையாவது கண்டுபிடித்துத் தருமாறு உயர்நிதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி தேடுதல் வேட்டையில் இறங்கிய மணிமங்கலம் போலீசாருக்கு, சுப்பராயனை கொலை செய்த மூவர் மீது சந்தேகம் வலுத்தது. அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

காணாமல் போன செந்தில்குமாரின் மனைவி மேனகாவுடன் சேர்ந்து, செந்தில்குமாரை கொலை செய்து செஞ்சி பகுதியில் உள்ள வயல்வெளியில் புதைத்து விட்டதாக அவர்கள் பகிரங்க வாக்குமூலம் அளித்தனர். உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் தோண்டி செந்தில்குமாரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

உண்மை அம்பலமானதை அறிந்து கொண்ட மேனகா, இந்த சொத்துக்களுக்கு ஒரே சொந்தக்காரராக இருக்கும் தனது மாமியார் பத்மினியை கடத்தி சென்னையில் ரகசிய இடத்தில் மறைத்து வைத்து மிரட்டி வந்துள்ளார்.

மருமகள் மேனகா, மாமியார் பத்மினி இருவரும் திடீரென காணாமல் போனதால், பத்மினியின் செல்போன் சிக்னலை போலீசார் கண்காணித்து வந்தனர். அவரது இருப்பிடித்தைக் கண்டுபிடித்த போலீசார் பத்மினியை பத்திரமாக மீட்டனர்.

ஆனால் மருமகள் மேனகா எஸ்கேப் ஆகி விட்டார். பத்மினியிடம் மேற்கொண்ட விசாரணையில், மேனகா தன்னை கடத்திச் சென்று சொத்துக்கள் அனைத்தையும் அவர் பெயருக்கு மாற்றி தர வேண்டும் என கேட்டு அடைத்து வைத்து மிரட்டியதாக தெரிவித்தார். இருப்பினும் மூன்று கொலைகளுக்கு காரணமான மேனகா கிடைக்காததால், தனிப்படை அமைத்து போலீசார் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கடந்த 4 வருடங்களாக மேனாக எங்கு பதுங்கியிருக்கிறார் என்பது தெரியாமல் போலீசார் திணறி வந்தனர். மேனகாவின் இரண்டு குழந்தைகளும் சித்தாலப்பாக்கம் பகுதியில் உள்ள அவரின் பெற்றோர் வீட்டில் தங்கி படித்து படித்து வந்தனர்.

அவர்களை மேனகா ரகசியமாக பார்க்க வந்து செல்வதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. சித்தாலப்பாக்கம் பகுதிக்கு சென்று ரகசியமாக கண்காணித்து வந்த போலீசார், மேனகாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அனைத்து உண்மைகளும் தெரியவந்தன.

முதலில் சொத்துக்காக தனது கணவனை தூண்டி விட்டு கணவனின் தம்பியான ராஜ்குமாரை கொலை செய்ய வைத்தார். பின் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் செந்தில்குமாரை, செஞ்சிக்குஅழைத்துச் சென்று சமாதானப்படுத்துவது போல் நடித்து,

கள்ளக்காதலன் உதவியுடன் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். கள்ளக்காதலன் ராஜேஷ் கண்ணன், அவரது கூட்டாளிகள் ஹரிஹரன், அன்பு ஆகியோர் மதுவாங்கிக் கொடுத்து கொலை செய்து அருகில் உள்ள களனியில் புதைத்ததையும் வாக்குமூலமாகத் தெரிவித்தார்.

பின் சொத்துக்கு சொந்தக்காரரான மாமனாரை அதே மூவருக்கு திட்டம் போட்டுக் கொடுத்து தீர்த்துக் கட்டியதையும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து மேனகாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மூன்று கொலைகளை செய்துவிட்டு நான்கு வருடங்களாக தலைமறைவாக இருந்த பெண் சிக்கியிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.