இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த இளம்தம்பதி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர்களின் ஒரு வயது குழந்தை அனாதையாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரின்ஸ். இவரும் சந்திரிகா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்த நிலையில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் குடும்பத்தாரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் உள்ள தொடர்பை சந்திரிகா முழுவதுமாக இழந்த நிலையில் கணவருடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.
இந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மருந்து நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த பிரின்சுக்கு கொரோனா லாக்டவுன் காரணமாக வேலை பறிபோனது.
இதனால் வருமானம் இன்றி அவர் தவித்தார், இது தொடர்பாக கணவன் மனைவி, இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
நேற்றும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பிரின்ஸ் தனது அறைக்குள் சென்று மனைவியின் புடவையால் தூக்கிட்டு கொண்டார்.
இதை ஜன்னல் வழியாக பார்த்து அதிர்ச்சியடைந்த சந்திரிகா உடனடியாக தனது உறவினருக்கு போன் செய்து நடந்ததை பதற்றத்துடன் கூறினார்.
பின்னர் குழந்தையை தனியாக விட்டு வீட்டின் இன்னொரு அறைக்கு சென்று தனது துப்பாட்டாவால் தூக்கிட்டு சந்திரிகா தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து உறவினர்கள் மற்றும் பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்த போது பிரின்ஸ் மற்றும் சந்திரிகா ஆகிய இருவரும் தனித்தனி அறையில் சடலமாக தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இது எதையும் அறியாத அவர்களின் குழந்தை அழுது கொண்டிருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.