கர்ப்பத்தை மறைத்த மனைவி : வீட்டில் நடந்த பிரசவம் : குழந்தையை குப்பையோடு சேர்த்து எரித்த அவலம்!!

328

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனி தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன் வயது 35, இவர் அப்பகுதியில் ஹோட்டல் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி திவ்யா வயது 27. இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் வீட்டின் அருகே இருந்த குப்பையில் பாதி எரிந்த நிலையில், பிறந்த குழந்தையின் உடல் இருந்துள்ளது, இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திவ்யாவை பிடித்து விசாரித்த நிலையில், திவ்யா தனக்கு கடந்த சில மாதங்களாக மாதவிடாய் வராத நிலையில் வயிற்றில் கட்டி இருப்பதாக நினைத்து மருத்துவம் செய்து வந்தேன்.

ஆனால் ( ஏப்ரல் 6) தேதி இரவு எனக்கு குழந்தை இறந்து பிறந்தது, எனவே திடீரென குழந்தை பிறந்ததால் அனைவரும் என்னை சந்தேகப்படுவார்கள் என வீட்டின் அருகே அதிகாலை 5 மணியளவில் உறவினர் ஒருவர், குப்பையை கொளுத்திக்கொண்டிருந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் குழந்தையை குப்பையில் வீசி விட்டேன் என வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில் போலீசார் திவ்யாவை அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். திவ்யா மற்றும் அவரது கணவர் மதிவண்ணனிடம் மீண்டும் செந்துறை இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரணை நடத்தியுள்ளார்.

விசாரணையில் மதிவண்ணன்,திவ்ய கர்ப்பமானதை தன்னிடம் மறைத்து வந்ததாகவும்,சில மாதங்கள் ஆனா நிலையில் வயிறு பெரிதாவதை குறித்து அவரிடம் கேட்டபோது கட்டி என பொய் சொன்னார்,


பின்னர் அவருக்கு வீட்டில் குழந்தை பிறந்தது, அந்த குழந்தையின் முகம் மற்றும் உருவம் என்னை போல் இல்லை, அதனால் யாருக்கோ பிறந்த குழந்தை என்று சந்தேகம் அடைந்து திவ்யாவிடம் வாக்குவாதம் செய்தேன். இருவருக்கும் சண்டை முற்றிய நிலையில், ஆத்திரத்தில் நான் குழந்தையை தூக்கி வீசினேன்.

இதனால் குழந்தை அலறி அழ தொடங்கியது, எனவே சத்தம் வெளியே கேட்காமல் இருக்க திவ்யா ஒரு துணியால் குழந்தையின் வாயை பொத்தினார். இதனால் மூச்சு விடமுடியாமல் குழந்தை திணறி இறந்துவிட்டது.

பின்னர் இருவரும் சேர்ந்து இறந்த குழந்தையை அருகில் இருந்த குப்பையோடு சேர்த்து எரித்து விட்டோம். ஆனால் குழந்தை பாதி மட்டும் எரிந்த நிலையில் உடலை பார்த்த ஊர்மக்கள் உங்களிடம் தெரிவித்துள்ளனர் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். திவ்யா மட்டும் போலீசின் கட்டுப்பாட்டில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.