கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர் : வயிற்றிலேயே குழந்தை இறந்த சோகம்!!

221

அமெரிக்கா…

இந்திய மாநிலம், கேரளா கோட்டயத்தைச் சேர்ந்தவர் மீரா ஆபிரகாம் (வயது32). இவரது கணவர் அமல் ரெஜி. இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பிலிருந்து அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகின்றனர்.

இவர்களுடைய 3 வயது மகன் டேவிட் கேரளாவில் தாத்தா, பாட்டி பராமரிப்பில் இருந்த நிலையில், மகனையும் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றனர். இதில், மீண்டும் மீரா கர்ப்பமானார். அவர், அங்கேயே சகோதரியுடன் சேர்ந்து செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற தினம், தனது கணவர் அமல் ரெஜியுடன் மீரா காரில் சென்றுள்ளார். அப்போது, காரில் வைத்தே இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளனர்.


அப்போது, ஆத்திரத்தில் தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து 10 முறை மீராவை அமல் ரெஜி சுட்டார். பின், இரத்த வெள்ளத்தில் மீரா சரிந்தார். உடனே, அமல் ரெஜி சிறிது தூரம் சென்றதும் அங்கிருந்த தேவாலய பார்க்கிங் பகுதியில் தனது காரை நிறுத்தினார்.

அப்போது, அங்குள்ளவர்களிடம் மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டதாகவும், இது பற்றி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவேண்டுமெனவும் கூறியுள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த பொலிஸார், மீராவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அமல் ரெஜியை பொலிஸார் கைது செய்தனர். இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மீராவின் குழந்தை வயிற்றிலேயே இறந்தது.

இது தொடர்பாக அமல் மீது கொலை முயற்சி மற்றும் பிறக்காத குழந்தையை வேண்டுமென்றெ கொன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து படுகாயங்களுடன் மீரா சிகிச்சை பெற்று வருகிறார்.