கல்லூரி படிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாய், 25 வயது இளைஞருடன் காவல்நிலையத்தில் தஞ்சம்!!

287

சேர்த்து வைக்குமாறு கெஞ்சிக் கேட்ட காதலர்களுக்கு ஏற்பட்ட இறுதி முடிவு என்ன?

சேலம் மாவட்டம் தாரமங்கலம் காவல்நிலையத்தில் ஜூன் 17-ம் தேதியன்று காதல் ஜோடி ஒன்று பதற்றத்துடன் நுழைந்து தங்களை சேர்த்து வைக்குமாறு கேட்டுக் கொண்டது.

இதையடுத்து பணியில் இருந்த காவலர்கள், இருவரையும் அமர வைத்து விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, காவல்நிலையத்துக்கு வெளியே திடீரென 25-க்கும் மேற்பட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது வெளியான தகவல்கள் போலீசாரையே திடுக்கிட வைத்தது. தன்னைக் காதலனுடன் சேர்த்து வைக்குமாறு கெஞ்சிக் கேட்ட அந்த பெண்ணுக்கு கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகன் இருந்த விவரம் தெரியவந்தது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சிக்கம்பட்டியை அடுத்த சின்னக்காடம்பட்டியை சேர்ந்தவர் லலிதா. தாரமங்கலத்தில் பத்திர எழுத்தரிடம் உதவியாளராக வேலை செய்து வந்த இவருக்கு கணேசன் என்ற கணவனும், கல்லூரி படிக்கும் மகன் மற்றும் 9-வது வகுப்பு படிக்கும் மகளும் உண்டு.


இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் கணேசன் திடீரென உயிரிழந்து போனதைத் தொடர்ந்து, லலிதாவுக்கு உடன் வேலை பார்த்த விஜய் என்பவருடன் பழக்கம் உண்டானது. 25 வயதான விஜய்க்கு, 36 வயதான லலிதாவுடன் காதல் அரும்பிட, இருவரும் 4 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.

இதற்கிடையே இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர காதல் இளஞ்சிட்டுகள் இரண்டும், குடும்ப கூட்டை விட்டு பிரிந்து சிறகடித்து வானில் பறக்கத் தயாராகின.

இந்நிலையில் 17-ம் தேதியன்று விஜய்யும், லலிதாவும் தாரமங்கலம் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்து திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அதே நேரம் லலிதாவின் மகன், மகள் மற்றும் விஜய்யின் தாய் உள்ளிட்ட இருவரின் உறவினர்களும் புடை சூழ காவல்நிலையத்தில் முற்றுகையிட்டனர்.

விஜய்யை சந்தித்த அவரது தாய், மற்றும் விஜய்யின் நண்பர்கள் வயது மூத்த பெண்ணுடன் திருமணம் செய்தால் சரியாக வராது என சமாதானம் செய்தனர்.

இதனால் திடீரென மனம் மாறிய விஜய், லலிதா தனக்கு தேவையில்லை எனக் கூறி பெற்றோருடன் செல்ல தயாரானார். இதைக் கேட்ட லலிதா, அதிர்ச்சிக்குள்ளாகி விஜய்யை தனியே அழைத்து சென்று கெஞ்சினார்.

பின்னர் காதலனின் கைகளைப் பிடித்து காவல்நிலையத்துக்குள் அழைத்துச் சென்ற லலிதா, தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக கூறி விஜய் மீது புகார் அளிக்க சென்றார்.

பின்னர் காதலியின் கண்ணீரைக் கண்ட விஜய், காதலே பெரிது எனக் கூறி லலிதாவை திருமணம் செய்ய விரும்புவதாக போலீசாரிடம் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையடுத்து காதலர்கள், லலிதாவின் தம்பிகளுடன் அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவீட்டார் உறவினர்களும் கண்ணீரோடு காவல்நிலையத்தை விட்டு வெளியேறினர். காதலர்களுக்குள் நடந்த இந்த பாசப்போராட்டத்தால் காவல்நிலையத்தில் சுமார் 3 மணி நேரம் பரப்பு நிலவியது.