கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த மாமியாரை, கள்ளக்காதலன் உதவியுடன், கழுத்தை நெரித்துக் கொலைச் செய்து விட்டு, மருமகளே தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே உள்ள கரியபெருமாள் வலசை கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு (56). இவர், திடீரென மாயமானதை தொடர்ந்து அவரது இளைய மகன் சேட்டு தனது நண்பர் ராஜேந்திரனுடன் சேர்ந்து தேடினார்.
அப்போது காட்டுப்பகுதியில் ஒரு பெண்ணின் உடல் எரிந்து கொண்டிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண் சேட்டுவின் தாய் அலமேலு என்பது தெரிய வந்தது. இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.
தகவல் அறிந்த ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது, அலமேலு தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அவரை கொலை செய்தது யாராக இருக்கலாம் என்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அலமேலுவின் மருமகள் பவித்ரா, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றி இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
உடனே போலீசார் பவித்ராவையும், மணிகண்டனையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு, கொலை செய்யப்பட்ட அலமேலுவுக்கு ஏழுமலை (20), சேட்டு (18) என்ற 2 மகன்கள் உள்ளனர். அலமேலுவின் கணவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலைக்கும், அதே கிராமத்தை சேர்ந்த அலமேலுவின் அண்ணன் நடேசனின் மகள் பவித்ரா (20) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. பவித்ராவின் கணவர் ஏழுமலை திருமணத்துக்கு பிறகும் கோவையில் வேலை செய்து வந்தார். கணவர் வெளியூரில் இருந்ததால் பவித்ரா தனிமையில் தவித்து வந்தார்.
எனவே பக்கத்து வீட்டில் வசிக்கும் கல்லூரி மாணவர் மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமானார். அருகருகே உள்ள வீடு என்பதால் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
இவர்களது கள்ளக்காதல் நாளடைவில் பவித்ராவின் மாமியார் அலமேலுவுக்கு தெரியவந்துள்ளது. அவர், எனது மகனுக்கு நீ துரோகம் செய்யாதே என்று மருமகளை கண்டித்துள்ளார். அப்படி இருந்தும் பவித்ரா தனது கள்ளக்காதலை கைவிட மனம் இல்லை. ரகசியமாக மணிகண்டனை சந்தித்து வந்துள்ளார்.
பவித்ரா ஆடு மேய்த்து வந்ததால் காட்டுப்பகுதியிலேயே இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவிக்க தொடங்கினர். அப்படித்தான் நேற்று முன்தினம் வழக்கம்போல் ஆடு மேய்க்க சென்ற பவித்ரா மாலையில் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
ஆடு மேய்க்க சென்ற மருமகளை காணவில்லையே என அலமேலு தேடி சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது, ஆடுகள் ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்தன.
பவித்ராவும், மணிகண்டனும் ஒரு இடத்தில் தங்களை மறந்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். இதைக்கண்ட அலமேலு இருவரையும் கடுமையாக எச்சரிக்கை செய்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அலமேலு கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் உடலை எரித்து விட்டால் யார் என்று அடையாளம் தெரியாது என அவர்கள் நினைத்துள்ளனர். உடனே வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்து மணிகண்டன், அலமேலு உடல் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். உடல் எரிய தொடங்கியதும் அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
ஆனால் அலமேலு உடல் பாதி மட்டும் எரிந்து இருக்கிறது. பவித்ரா தனது வீட்டுக்கும், மணிகண்டனும் அவருடைய வீட்டுக்கும் ஒன்றும் நடக்காதது போல் சென்று விட்டனர். இதற்கிடையே தாயை தேடி சேட்டு அலைந்த போதுதான், அலமேலு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து சிங்காரப்பேட்டை போலீசார் பவித்ரா, மணிகண்டன் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.