சென்னையில் பெண்களை மாய வலையில் விழவைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த கள்ளக்காதல் தம்பதியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், அய்யாப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 33). மேலும் அதே பகுதியை சேர்ந்த நித்தியா (33) என்ற தோழியோடு சேர்ந்து திருமுல்லைவாயல் பகுதியில் நியோ பிட்னெஸ் ஜிம் எனும் உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வருகின்றனர்.
இதில், சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மின் ஆக பணியாற்றும் ஆவடி கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் உடல் பருமனை குறைக்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜிம்மில் உறுப்பினராக சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
தினமும் ஜிம்முக்கு வந்து சென்றபோது ஜிம் மாஸ்டருக்கும், அப்பெண்ணுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அதிகரித்து நெருக்கமாகி தகாத உறவாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி ஜிம்மில் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜிம் மாஸ்டர் சிவகுமார் மற்றும் உடல் பருமனை குறைக்க வந்த பெண் இருவரும் ஜிம்மில் உல்லாசமாக இருந்ததை சிவகுமாரின் தோழி நித்தியா என்பவர் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
இதனிடையே ஜிம் மாஸ்டருக்கும், அவரது தோழியாக அறியப்பட்ட நித்யாவுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவுமுறை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நித்தியா இந்த வீடியோக்களை காட்டி அப்பெண்ணிடம் மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இதுகுறித்து அப்பெண் ஜிம் மாஸ்டர் சிவகுமாரிடம் கூறியுள்ளார்.
அதற்கு சிவகுமார் அப்பெண் கேட்கும் பணத்தை கொடுத்துவிடு இல்லை என்றால் அசிங்கமாகிவிடும் என தெரிவித்துள்ளார். இதே போன்று நித்தியா பலமுறை மிரட்டி பல லட்ச ரூபாய் பறித்ததாக கூறப்படுகிறது.
இதனால் செய்வதறியாது திகைத்த அப்பெண் நடந்ததை தனது கணவரிடம் கூறியுள்ளார். இது குறித்து அவரது கணவர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் இந்த வழக்கை ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள ஜிம் மாஸ்டர் சிவகுமார் மற்றும் அவரது கள்ளக் காதலி நித்தியா ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனிடையே உடல் பருமனை குறைக்க வந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து ஜிம் மாஸ்டர் மற்றும் அவரது கள்ள காதலி இருவருமே கூட்டாக சேர்ந்து பணம் பறித்து வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் இருவரும் இது போன்று ஜிம்முக்கு வரும் பெண்களை குறிவைத்து மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டர்களா என்பது குறித்தும், யார் யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்தும் மகளிர் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.