கணவனின் கள்ளக்காதல் விவகாரத்தால் இரண்டு குடும்பங்கள் செய்வதறியாது சோகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரில், சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், கணவனின் கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதத்தால் இளம் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ஹெப்பால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கனகநகர் பகுதியைச் சேர்ந்தவர் பஷிர்(33). விமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் பஷிரின் மனைவி பாஹர் அஸ்மா(29).
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் பேசி முடித்து நிச்சயித்த நிலையில், திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பஷிருக்கும், ஹெப்பாலை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த அஸ்மா, தனது கணவர் பஷிரைக் கண்டித்து வந்துள்ளார். ஆனால் அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
குடும்பத்தினர் தலையிட்டு 2 பேரையும் சமாதானம் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கணவர் வெளியே சென்றிருந்த போது, வீட்டில் தனியாக இருந்த அஸ்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அஸ்மாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பஷிர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.