கள்ளக்காதல் தொடர்பில் இருந்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி, மாமியாரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் ெபங்களூரு அடுத்த சிக்கபனாவரா பகுதியில் கேட்பாரற்று நின்றிருந்த காரை போக்குவரத்து ேபாலீசார் சோதனையிட்டனர்.
அப்போது அந்த காருக்குள் ஒருவர் இறந்து கிடப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடக்கு பெங்களூரு டி.சி.பி சைதுல் அதாவத் கூறுகையில், ‘காருக்குள் இறந்த நிலையில் மீட்கப்பட்டவரின் பெயர் லோக்நாத் சிங் (37) என்பது தெரியவந்தது.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த லோக்நாத் சிங்கின் மனைவி யஷஸ்வினி (27), மாமியார் ஹேமா பாய் (47) என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், லோக்நாத் சிங் சாப்பிட்ட உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளனர்.
அவர் மயக்கமடைந்த பின்னர், அவரை காரில் எடுத்து போட்டுக் கொண்டு சென்றுள்ளனர்.
ஒதுக்குப்புறமான இடத்தில் காரை நிறுத்தி, லோக்நாத் சிங்கின் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்றுள்ளனர். பின்னர் காரையும், லோக்நாத் சிங்கையும் அப்படியே விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக லோக்நாத் சிங்கின் மனைவி, மாமியாரை கைது செய்துள்ளோம். இவர்கள் தான் கொலையை செய்துள்ளனர்.
கொலைக்கான காரணம், லோக்நாத் சிங்கிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. அதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.
இருந்தும் அவர் அந்தப் பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். அதனால் அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.