சென்னை அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ராமநாதபுரம் அருகே மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ராமநாதபுரம் அருகே வசிக்கும் இளம்பெண் ஒருவர் புத்தாண்டையொட்டி காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார்.
இதன்போது புத்தியேந்தல் என்ற பகுதியில் காதலர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆட்டோ டிரைவரான காதலன் மற்றும் பெண்ணை நால்வரும் தாக்கினர்.
அதன்பின் காதலனை விரட்டி விட்டு அந்த பெண்ணை ஒதுக்குப்புறமான இடத்திற்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த பெண் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டார். 4 வாலிபர்கள் தன்னை தாக்கி கூட்டு பலாத்காரம் செய்ததாக மருத்துவர்களிடம் கூறினார்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தது. இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் புத்தேந்தல் பகுதியை சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவராமன் ஆகியோர் 4 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர்.
ராமநாதபுரம் மகளிர் போலீசார், மிரட்டல், தாக்கி காயப்படுத்துதல், கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், ராமநாதபுரம் புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த புவனேஷ்குமார் (வயது 27), சரண்முருகன் (29), செல்வகுமார் (27), குட்டி என்ற முனீஸ் கண்ணன் (25) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ராமநாதபுரம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து வரும் 10ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.