பஞ்சாப் மாநிலத்தில்…
காதலிக்காக யார் யாரோ என்னவெல்லாமோ பரிசு தருகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில், தன்னுடைய காதலிக்காக, காதலி எழுத வேண்டிய போட்டித் தேர்வை காதலன் எழுத முயற்சித்து, அதற்காக காதலியைப் போல பெண் வேடமிட்டு, போட்டித்தேர்வில் கலந்து கொண்டு தேர்வும் எழுதி அதிர வைத்திருக்கிறார்.
இந்த போட்டித் தேர்வில் கலந்து கொள்வதற்காக தனது காதலியைப் போல் வேடமிட்டு, ஆதார் கார்டு, ஹால் டிக்கெட் என அனைத்து ஆவணங்களையும் போலியாக உருவாக்கி போட்டித்தேர்வில் கலந்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில், கைரேகையால் காதலன் அதிகாரிகளிடம் வசமாக சிக்கினார். தேர்வு எழுத வந்த காதலனை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பகுதியில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜனவரி 7ம் தேதி நடைபெற்றது. பாபா பரித் பல்கலைகழகம் சார்பில் டிஏவி பப்ளிக் பள்ளியில் இந்த தேர்வுகள் நடைபெற்றது.
இதில் பரம்ஜித் கவுர் என்ற பெண் ஒருவர் தேர்வு எழுதுவதற்காக வருகை தந்திருந்தார். சிவப்பு நிற வளையல்கள், உதட்டுச் சாயம் மற்றும் பெண்களின் உடையில் இருந்ததால் அவரை உள்ளே அனுமதித்துள்ளனர்.
மேலும் அவரிடம் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு ஆகியவையும் இருந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை. இருப்பினும் இந்த தேர்வுகள் முழுவதும் மின்னணு முறைக்கு மாற்றப்பட்டிருந்ததால், தேர்வர்கள் அனைவரும் தங்களது விரல் ரேகைகளை வைக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அப்போது பரம்ஜித்தின் கை ரேகை விழாததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பெண் அல்ல, ஒரு ஆண் என்பது தெரிய வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக அவரைப் பிடித்த அதிகாரிகள், போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவரது பெயர் அங்ரேஷ் சிங் என்பதும், அவர் பரம்ஜித் கவுரின் காதலன் என்பதும் தெரியவந்தது. பரம்ஜித்தின் விண்ணப்பங்களை பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்து இருந்த நிலையில், அவருக்கு பதிலாக இந்த தேர்வை எழுத அங்ரேஷ் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது போலி ஆவணங்களை தயாரித்ததாக கைது செய்துள்ள போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாபில் இது போன்ற தேர்வுகளில் ஆள்மாறாட்டங்களில் ஈடுபடுவது புதிதல்ல. கடந்த 2011ம் ஆண்டு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்ற போது, ஆள்மாறாட்டம் செய்தவர்களை போலீஸார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.