காதலித்து ஏமாற்றிய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

176

தன்னைக் காதலித்து விட்டு, பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் காதலை பாதியில் கைவிட்டு, பேச மறுத்த காதலியையும், அவளது குடும்பத்தினரையும் விநோதமாக பழிவாங்க நினைத்த மாணவன் ஒருவன் ஆன்லைனில் ஆர்டர் செய்து மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறான்.

சென்னை பெரியமேட்டில் டியூஷன் செல்லும் போது கல்லூரி மாணவி ஒருவர் 17 வயது சிறுவன் ஒருவனைக் காதலித்து வந்துள்ளார். இதையறிந்த பெற்றோர் இருவரையும் பிரித்து விட்டனர். இந்த காதல் விவகாரத்தில் சிறுவன் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கல்லூரி மாணவியிடம் சிறுவன் பேச முயன்ற போது, அந்த மாணவி சிறுவனைக் காதலிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 17 வயது மாணவன், காதலித்து விட்டு ஏமாற்றி சென்ற தனது காதலி மற்றும் அவரது குடும்பத்தினரை பழிவாங்க முயன்றான்.

அதன்படி, கல்லூரி மாணவியை பழிவாங்க, அமேசான், பிளிப்கார்ட், ஸ்விக்கி, ஜொமேட்டோ உள்ளிட்ட பல்வேறு டெலிவரி ஆப்ஸ் மூலம் கல்லூரி மாணவியின் வீட்டு முகவரிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் செய்துள்ளார்.

இதனால், பல டெலிவரி ஊழியர்கள், கல்லூரி மாணவியின் முகவரிக்கு சென்று ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்தனர். குறிப்பாக கல்லூரி பெண்ணுக்கு டெலிவரி செய்யும் ஊழியர்களுடன் சண்டை போடுவதற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்த அனைத்து பொருட்களுக்கும் சிறுவன் பணம் கொடுத்து அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.


ஒவ்வொரு முறையும் கல்லூரி மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆர்டர் செய்யவில்லை என்று டெலிவரி ஊழியர்களிடம் கூறிய போதும், டெலிவரி ஊழியர்களும் ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை செலுத்தாமல் கோபத்தில் சண்டையிட்டனர். மூன்று நாட்களாக ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்து சிறுவன் மாணவியின் குடும்பத்தினரை டார்ச்சர் செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.

ஆன்லைன் டெலிவரி மூலம் கஷ்டத்தில் இருந்த கல்லூரி மாணவியை மேலும் சித்ரவதை செய்ய ஓலா, ஊபர் உள்ளிட்ட வாடகை கார் புக்கிங் ஆப்ஸ் மூலம் 77 முறை வாகனங்களை புக் செய்து கல்லூரி மாணவியின் முகவரிக்கு அனுப்பி மன உளைச்சல் கொடுத்துள்ளார்.

மேலும், கல்லூரி மாணவியின் தந்தை இறந்ததாக புகைப்படங்களை சித்தரித்து டெலிகிராம் மூலம் பதிவிட்டதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கல்லூரி மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆன்லைனில் ஆர்டர் செய்த விண்ணப்பங்களில் பயன்படுத்திய செல்போன் எண், மின்னஞ்சல் ஆகியவற்றைக் கண்டுபிடித்து ஐபி முகவரி மூலம் சிறுவனை கைது செய்தனர்.

போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்த போது தான், காதல் விவகாரத்தில் இவ்வளவு செயல்கள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. சிறுவனிடம் இருந்து இரண்டு செல்போன்கள், இரண்டு வைஃபை ரூட்டர்கள் மற்றும் ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

தற்போது 18 வயதாகும் சிறுவன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறான். இருப்பினும், குற்றம் நடந்தபோது அவருக்கு 17 வயது என்பதால், போலீசார் சிறுவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் அந்த சிறுவனுக்கு உளவியல் ஆலோசனை கொடுத்து தாயுடன் அனுப்பி வைத்தது தெரிய வந்துள்ளது.