காதலித்து கழற்றிவிட்ட கல்லூரி மாணவி… வீடு புகுந்து கத்தியால் குத்திய அத்தை மகன்!!

80

திருவாரூர் மாவட்டத்தில், சொந்த மாமா மகளே காதலித்து விட்டு, திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து பேச மறுத்து வந்த நிலையில் வீடு புகுந்து கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூரைச் சேர்ந்த தம்பதியர் மணிகண்டன் -ரேவதி. இந்த தம்பதியரின் 2வது மகள் வசந்தபிரியா (24).

மன்னார்குடியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எம்.பில் படித்து வரும் வசந்தபிரியாவும், மணிகண்டனின் அக்கா மகனான மகாதேவனும் (26) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அத்தை மகன், மாமன் மகள் என இருவரும் உறவுமுறை என்பதால் இருவீட்டின் பெற்றோரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருவருக்கும் பின்னாட்களில் திருமணம் செய்து வைக்கும் முடிவில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மகாதேவனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால் வசந்தபிரியாவிற்கு மகாதேவனைப் பிடிக்காமல் போனதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மகாதேவனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டு, அவரைத் திருமணம் செய்து கொள்ளவும் மறுத்து வந்துள்ளார்.

மகளுக்கு பிடிக்கவில்லை என்பதால் இரு குடும்பத்தாரும் இவர்களது திருமண பேச்சை அத்துடன் நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் கடந்த ஒரு வருட காலமாக மகாதேவனிடம், வசந்தபிரியா பேசாமல் இருந்து வந்துள்ளார்.


வசந்தபிரியாவிடம் தொடர்ந்து மகாதேவன், தன்னைக் காதலிக்குமாறும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை கல்லூரிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய வசந்தபிரியா, வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வசந்தபிரியாவின் வீட்டிற்குள் நுழைந்த மகாதேவன், “மீண்டும் தன்னைத் திருமணம் செய்து கொள்ள கூறி வற்புறுத்தியுள்ளார்.

“எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை, வீட்டில் யாரும் இல்லை. நீ உடனே வெளியே போ” என்று வசந்தபிரியா கத்திய நிலையில்,

ஆத்திரமடைந்த மகாதேவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வசந்தபிரியாவின் கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் பலமாக குத்தியுள்ளார்.

இதில் ரத்தம் கொட்டிய நிலையில் அலறியபடி வீட்டிலிருந்து வெளியே வசந்தபிரியா ஓடிச் சென்றுள்ளார்.

கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து மகாதேவன் தப்பி ஓடி விட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் வசந்தபிரியாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, போலீசாருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசந்தபிரியாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் மகாதேவனைத் தேடி வருகின்றனர்.