மகாராஷ்டிராவில்..
மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் அனில் கெய்க்வாட். இவரது மகன் அஸ்வஜித் கெய்க்வாட். அஸ்வஜித்தும் பிரியா என்பவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் அஸ்வஜித் தனது குடும்ப விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரியாவை அழைத்துள்ளார்.
இதையடுத்து, அவரும் அந்த விழாவிற்கு சென்றுள்ளார். அப்போது அஸ்வஜித் தனது நண்பர்களை காதலிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த காதலனின் செயல்கள் விசித்திரமாக இருந்ததை கண்ட பிரியா, அவரிடம் எல்லாம் சரியாக இருக்கிறதா என கேட்டுள்ளார். மேலும், தனிமையில் பேச வேண்டும் என அழைத்துள்ளார். ஆனால், அஸ்வஜித் வரமறுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து, பிரியா விழாவில் இருந்து வெளியேறியுள்ளார். இதைக்கண்ட காதலன் தனது நண்பர்களுடன் வெளியே வந்து பிரியாவை தாக்கியதாக தெரிகிறது. மேலும், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அஸ்வஜித், காதலியின் கன்னத்தில் அறைந்ததோடு, கழுத்தை நெரித்துள்ளார். தப்பிக்க முயன்ற அவரின் கையையும் கடித்துள்ளார்.
அவர்களிடம் இருந்து தப்பிய பிரியா, அஸ்வஜித்தின் காரில் இருந்த ஃபோன் மற்றும் பிற பொருட்களை எடுக்க முயன்றபோது, அஷ்வஜித் தன் டிரைவரை விட்டு காதலி மீது காரை ஏற்ற முயற்சி செய்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்த பிரியா சாலையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். விபத்து நடந்து அரை மணி நேரத்திற்கு பிறகு அவ்வழியே சென்ற ஒருவர் காயமடைந்த பிரியாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியா சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் பற்றி அறிந்து மருத்துவமனைக்கு சென்ற போலீஸார் பிரியாவிடம் சம்பவம் பற்றி கேட்டு அறிந்தனர். இதைத்தொடர்ந்து, அஸ்வஜித் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை அஸ்வஜித்தை போலீஸார் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram