மலேசியா..
உலகில் காதலுக்கு மட்டும் தான் அனைத்து பேதங்களையும், தடைகளையும் உடைக்க கூடிய மற்றும் எல்லையில்லாத அன்பை உருவாக்க கூடிய சக்தி உண்டு.
அந்த வகையில் மலேசியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலுக்காக யாரும் செய்ய விரும்பாத பெரும் காரியம் ஒன்றை செய்துள்ளார்.
அது என்னவென்றால் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதற்காக சுமார் ரூ.2,484 கோடி மதிப்புள்ள தன்னுடைய சொத்துகளை தூக்கி எறிந்துள்ளார்.
மலேசியாவை சேர்ந்த ஏஞ்சலின் பிரான்சிஸ்(Angeline Francis Khoo) என்ற இளம்பெண் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற போது, தன்னுடன் படித்த ஜெடிடியா பிரான்சிஸ் என்ற சக மாணவரை காதலித்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய காதலை ஏஞ்சலின் பிரான்சிஸ் பெற்றோரிடம் தெரியப்படுத்திய போது, அவர்கள் சொத்து, அந்தஸ்து மற்றும் பணம் ஆகியவற்றை சுட்டிக் காட்டி காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து எந்தவொரு சலனமும் இல்லாமல் ஏஞ்சலின் பிரான்சிஸ் தன்னுடைய குடும்பம் மற்றும் அதன் பரம்பரை சொத்தான சுமார் 300 மில்லியன் டொலர்களை (அதாவது ரூ.2,484 கோடி) வேண்டாம் என மறுத்து விட்டு காதலன் ஜெடிடியா பிரான்சிஸை திருமணம் செய்து கொண்டுள்ளார். 2008ம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் குடும்பத்தினரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
ஏஞ்சலின் பிரான்சிஸ் மலேசியாவின் முக்கிய தொழிலதிபர் கூ கே பெங் மற்றும் முன்னாள் மிஸ் மலேசியா பாலின் சாய் ஆகியோரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ஏஞ்சலின் பிரான்சிஸின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு சமர்ப்பித்து இருந்த நிலையில், சாட்சியம் தெரிவிப்பதற்காக ஏஞ்சலின் பிரான்சிஸ் நீதிமன்றம் வந்து இருந்தார்.
இதையடுத்து அவர் காதலுக்காக எடுத்த மிகப்பெரிய முடிவு மீண்டும் இணைய வாசிகள் பலராலும் பாராட்டப்பட தொடங்கியுள்ளது. தந்தை எப்போதும் பணம் சம்பாதிப்பதில் மும்முரமாக இருந்த போது குடும்பத்துக்கு துணையாக இருந்த,
தாய்க்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சாட்சி தெரிவிக்க வந்த ஏஞ்சலின் பிரான்சிஸ் வந்து இருந்தார். மேலும் தனது தாயும் தந்தையும் மீண்டும் விரைவாக ஒன்றாக வருவார்கள் என நம்புவதாக கருத்து தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.