கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே உள்ள பெண்டிகிரியை சேர்ந்த அஞ்சலி என்பவரை விஷ்வா என்ற கிரீஷ் நீண்ட நாட்களாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்ய மறுத்தால் அஞ்சலியை கொன்றுவிடுவதாக கிரீஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அஞ்சலி போலீசில் புகார் அளித்துள்ளார். கிரிஷால் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக அஞ்சலி புகார் அளித்துள்ளார்.
ஆனால், போலீசார் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை கிரீஷ், அஞ்சலியின் வீட்டுக்குச் சென்று காதலை ஏற்கும்படி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அஞ்சலி மறுத்ததால், மறைத்து வைத்திருந்த கத்தியால் அஞ்சலியை கிரீஷ் குத்திவிட்டு ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
ரத்த வெள்ளத்தில் அஞ்சலி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஞ்சலியின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அஞ்சலி கொலை வழக்கில் கிரிஷை போலீசார் 2 நாட்களில் கைது செய்தனர். அஞ்சலி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்த போதிலும் அலட்சியமாக செயல்பட்டதால் பெண்டிகிரி காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.