காதல் கணவன் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் இளம்பெண் தந்தையுடன் தீக்குளிக்க முயற்சி!!

23

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, நத்தமேடு கிராமத்தில் வசித்து வருபவர் மாதையன்.

இவரது மகள் 24 வயது அஞ்சலி. இவர் அதே பகுதியை சேர்ந்த 25 வயது தங்கமணியை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தங்கமணி ரயில்வேயில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று அஞ்சலி தனது தந்தை மாதேசுடன், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து, இருவரும் தலையில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார், மண்ணெண்ணை கேனை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இது குறித்து அஞ்சலி ‘நானும், தங்கமணியும் பெற்றோரை எதிர்த்து, காதல் திருமணம் செய்து கொண்டோம். இதனால் எங்களது திருமணத்திற்கு, எந்த சீர்வரிசையும் எனது பெற்றோர் செய்யவில்லை.


இந்நிலையில், எனது கணவர், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், வரதட்சணை கேட்டு என்னையும், எனது குழந்தைகளையும் துன்புறுத்தி வருகின்றனர்.

இது குறித்து ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வரும் எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ எனக் கூறியுள்ளார். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.