காதல் கணவரை கழுத்திலேயே மிதித்து அடித்தே கொன்ற.. மனைவி நாடகத்தால் மிரண்ட போலீஸ்!!

368

தேனி மாவட்டம் போடி அருகே காதல் கணவரை, மனைவி அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செல்போனை விற்று மதுகுடித்ததால் ஆத்திரத்தில் கணவரை கொன்ற மனைவி நாடகமாடிய நிலையில், போலீஸ் விசாரணையில் சிக்கி உள்ளார்.

தேனி மாவட்டம் போடியை அடுத்த ஜக்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 42 வயதாகும் மோகன் என்பவர் எலக்ட்ரீசியன் ஆவார். இவருடைய மனைவி பெயர் கார்த்திகா. இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.

கடந்த மே 12-ந்தேதி காலை மோகன் தனது வீட்டில் மர்மமான முறையில் கிடந்தார். இது பற்றி போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது, அவர் மதுபோதையில் வீட்டின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து மோகனின் உடலை கைப்பற்றிய போடி டவுன் போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் எலக்ட்ரீசியன் மோகன் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி, விசாரணையை முடுக்கி விட்டார்கள். அப்போது மோகனின் மனைவி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினாரக்ள்.

அதில் கார்த்திகா தனது கணவரை அடித்துக்கொன்றுவிட்டு, நாடகமாடியது அம்பலமானது. கார்த்திகா போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் தகவல்களை வெளியிட்டனர்.


அதன்படி, கார்த்திகாவும், மோகனும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். மோகன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார். கடந்த மே 11ம் தேதி மது குடிப்பதற்கு அவரிடம் பணம் இல்லை.

இதனால் வீட்டில் இருந்த ஆண்ட்ராய்டு செல்போனை விற்று, அதில் கிடைத்த பணத்தில் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கி குடித்தார். இதுகுறித்து அறிந்ததும் மோகனிடம் கார்த்திகா தட்டிக்கேட்டுள்ளார் அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த கார்த்திகா வீட்டில் கிடந்த உருட்டு கட்டையால் மோகனை தாக்கி உள்ளார். மேலும் தனது காலால் அவரது நெஞ்சு, கழுத்து பகுதியில் மிதித்துள்ளார்.

சிறிது நேரத்தில் அவர் மயங்கி உள்ளார். பின்னர் கார்த்திகாவும், மகன்களும் போடி நடுப்பட்டியில் வசித்து வரும் மாமியார் வண்ணக்கிளி வீட்டுக்கு சென்றுவிட்டார்களாம்.

மறுநாள் காலையில் மீண்டும் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, மோகன் இறந்துபோனது தெரியவந்தது. கணவரை கொலை செய்தது தெரியவந்தால் அவமானம் என்று கருதிய கார்த்திகா, வீட்டின் படிக்கட்டில் இருந்து மோகன் தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடி உள்ளார்.

மேற்கண்ட தகவலை போலீசார் தெரிவித்தனர். இதனிடையே கணவனை கொன்று நாடகமாடிய கார்த்திகாவை போலீசார் கைது செய்து, போடி கிளை சிறையில் அடைத்தனர்.