ஈரோடு….
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பி.மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் பூரணி மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு கவுந்தப்பாடி மதன் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பூரணியின் வீட்டாரை பார்க்க விடாமல் மதன் வீட்டார் தொடர்ந்து தடுத்து வந்தனர்.
வரதட்சிணை சொத்துக்கள் மற்றும் பணம் இவைகளை கொடுத்தால் மட்டுமே மகளை பார்க்க அனுமதிப்போம் எனக் கூறிவிட்டனர். பூரணிக்கு குழந்தைகள் பிறந்த போதும் கூட பெண் வீட்டாரை பார்க்க அனுமதிக்கவில்லை . திடீரென அக்டோபரில் உடல் நிலை குறைவால் பூரணி இறந்து விட்டதாக பெண் வீட்டாருக்கு தகவல் அளித்தனர்.
அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் உடற்கூறு ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி பூரணி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
மனைவியை கொலை செய்த கணவர் மதன்குமார் மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்ய வேண்டும் பூரணியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுவரை இந்த புகார் குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து பூரணி வீட்டார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய விசாரணை நடத்தப்படும் என போலீசார் உறுதியளித்தன் பேரில் பூரணி குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.