காபூல் விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

335

ஆப்கானிஸ்தானில்..

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை அடுத்து, அங்கு 20 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது தலிபான் பயங்கரவாதிகள். இந்த நிலையில், தலிபான்களில் ஆட்சியை விரும்பாத ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து அண்மைய நாட்களில் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கிடைக்கும் விமானங்களில் ஏறி நாட்டை விட்டு சென்றுவிட வேண்டும் என மக்கள் பறிதவித்த காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதேவேளை, விமானங்களில் சக்கரங்கள் மற்றும் இறக்கைகளில் தொங்கி இருந்தவர்கள், நடுவானில் பறந்துகொண்டிருக்கும் விமானத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவங்களும் அரங்கேறியிருந்தன.


இந்நிலையில் நம்மால் செல்ல முடியவில்லை என்றாலும், நம் பிள்ளைகளாவது வெளிநாட்டிற்கு சென்று நிம்மதியாக உயிர் வாழட்டும் என்று, குழந்தைகளை விமானநிலையத்தில் இருக்கும் இராணுவ வீரர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

அப்படி ஒப்படைக்கப்படும் குழந்தைகள், பாதுகாப்பாக வேறொரு நாட்டில் இருக்கும் குழந்தைகள் தத்தெடுக்கும் நிறுவனத்திடம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்படி காபூல் விமான நிலையத்தில் தனது தாயிடம் இருந்து பிரிந்து சென்ற 2 மாத ஆப்கானிய குழந்தையை துருக்கி இராணுவ வீரர்கள் பாசத்துடன் கவனித்து வந்துள்ளனர். இந்த குழந்தை முதலில் யார் என்பது தெரியவில்லை. இது தொடர்பான புகைப்படம் மட்டும் வெளியாகியிருந்தது.

இதையடுத்து தற்போது, அந்த குழந்தையின் பெயர் Farista Rahmani என்வும் பிறந்து 2 மாதமே ஆன நிலையில், விமானநிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் போது, குழந்தை காணாமல் போனதாகவும்,தெரியவந்துள்ளது.

அதைத் தொடர்ந்து துருக்கி இராணுவம் அந்த குழந்தையை பத்திரமாக மீட்டு, உணவளித்து வந்துள்ளனர். அதன் பின் அந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பது தெரியவந்ததால், அது குழந்தையின் தந்தையிடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் தாய் Hadiya Rahmani எனவும் தந்தை Ali Musa Rahmani எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த குழந்தையை தன் குழந்தை போல், துருக்கி பெண் இராணுவ வீராங்கனை பாசமாக அணைத்து முத்தமிட்டுக் கொண்ட அந்த ஒற்றை புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

இதே போல் ,விமான நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த முள்வேலியை தாண்டி தங்கள் குழந்தைகளை மறு பக்கம் நின்றிருந்த இராணுவ வீரர்களிடம் கொடுக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

அப்படி கொடுக்கப்பட்ட ஒரு குழந்தையை அமெரிக்க வீரர் ஒருவர் வாங்கி தன் சக வீரரிடம் கொடுக்கும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று வைரலானது. இந்நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார்.

அந்த பெண் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாலேயே அமெரிக்க வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என அந்த அதிகாரி கூறியுள்ளார். விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த குழந்தைக்கு சிகிச்சையளிக்கபட்டபின், மீண்டும் அந்த குழந்தை அதன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.