கார் நிறுவன மேலாளரை அடித்து கொன்று ரூ.22 லட்சம் கொள்ளை: தேனியில் பரபரப்பு!!

936

தேனியில் பைபாஸ் சாலையில் தனியார் கார் நிறுவன மேலாளரை மர்ம நபர்கள் அடித்துக் கொன்று, ரூ.22 லட்சம் கொள்ளையடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி, பென்னிகுக் நகரில் குடியிருப்பவர் அழகர்சாமி மகன் அருண்குமார் (34). இவர் தேனி நகர், பெரியகுளம் சாலையில் உள்ள பிரபல கண் மருத்துவமனை எதிரில் உள்ள ஒரு தனியார் கார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார்.

நேற்று பகல் 1 மணியளவில், இவர் தனது நிறுவனத்திற்காக தேனி நகரில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.22 லட்சம் பணம் எடுக்கச் சென்றார். நேற்று மாலை 4 மணியாகியும் அருண்குமார் வராததால், நிறுவன உரிமையாளர் சன்னாசி தொடர்பு கொண்டபோது, அருண்குமாரின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் சந்தேகமடைந்தவர்கள் பல இடங்களில் தேடினர்.

அப்போது, தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெரியகுளம் செல்வதற்கான பைபாஸ் சாலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, பைபாஸ் சாலை டாஸ்மாக் கடை அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ரத்த வெள்ளத்தில் அருண்குமார் இறந்து கிடந்தார்.


அல்லிநகரம் போலீசார் அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளை நடந்த இடத்தில் தேனி எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி விசாரணை நடத்தினார். அருண்குமார் ரூ.22 லட்சம் பணத்தை வங்கியில் இருந்து எடுத்துக் கொண்டு செல்வதை முன்கூட்டியே அறிந்தவர்கள்தான், இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அருண்குமார் பெரியகுளம் சாலையில் உள்ள வங்கியில் பணத்தை எடுத்துக் கொண்டு, எதற்கு நிறுவனத்திற்கு வராமல் பைபாஸ் சாலைக்கு சென்றார் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கொலை குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.