குடிபோதையில் அட்ராசிட்டி… கணவரை கொன்று புதைத்த 2வது மனைவி, மைத்துனர் கைது!!

252

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா ஆடுதுறை அருகே உள்ள 69-சாத்தனூர் கிராமத்தில் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மகன் மாரிமுத்து (வயது 29) கொத்தனார். இவருக்கும் அஞ்சலைக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த பிரியா (21) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாரிமுத்துவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பிரியாவை மாரிமுத்து 2வது திருமணம் செய்து கொண்டு சாத்தனூர் கிராமத்தில் வசித்து வந்தார்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாரிமுத்து குடித்துவிட்டு பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டார். கடந்த 6ம் தேதி இரவு ஆடுதுறையை சேர்ந்த மாரிமுத்து, பிரியா, மாரிமுத்துவின் முதல் மனைவி அஞ்சலையின் தம்பி மணிகண்டன் (24) ஆகியோர் மாரிமுத்து வீட்டில் ஒன்றாக மது அருந்தினர்.

அப்போது குடிபோதையில் இருந்த 3 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரியா, மணிகண்டன் இருவரும் சேர்ந்து அருகில் கிடந்த அரிவாளை எடுத்து மாரிமுத்துவை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து பிரியாவும், மணிகண்டனும் சேர்ந்து கொலையை மறைக்க மாரிமுத்து வீட்டின் அருகே உள்ள தோப்பில் குழி தோண்டி மாரிமுத்துவின் உடலை புதைத்தனர்.

அப்போது மாரிமுத்துவின் தந்தை துரை, தனது மகனைக் காணவில்லை என்று புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த பிரியா, மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் தகராறில் மனைவியும், மைத்துனரும் சேர்ந்து கொத்தனார் உடலை கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.