குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்துகொள்ள, 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை வெட்டிய கணவன்!!

114

குழந்தையின் பாலினத்தை அறிய 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை அரிவாளால் வெட்டிய கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில், குழந்தையின் பாலினத்தை அறிய 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை அரிவாளால் கணவன் வெட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 19 -ம் திகதி படவுன் என்ற இடத்தில் நடைபெற்றது.

அனிதா என்ற 8 மாத கர்ப்பிணியை அவரது கணவர் பன்னா லால் தாக்கி வயிற்றை வெட்டியுள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 5 பெண் குழந்தைகள் உள்ளது. இதனால், வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்று கணவன் லால் அடிக்கடி மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.

அதோடு, ஆண் குழந்தை பிறக்கவில்லை என்றால் விவாகரத்து செய்வேன் என்றும் கணவர் மிரட்டியுள்ளார். இந்நிலையில், உள்ளூர் பூசாரி ஒருவர் அனிதாவுக்கு ஆறாவதாக பெண் குழந்தை தான் பிறக்கும் என்று கூறியதை நம்பி மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

பின்னர், வயிற்றில் இருக்கும் குழந்தையை அறிய வயிற்றை கிழிக்கபோவதாக மிரட்டியுள்ளார். இதனால், தப்பிக்க முயன்ற அனிதாவின் வயிற்றை அரிவாளை வைத்து கணவர் வெட்டியுள்ளார்.

இதனை அறிந்த அனிதாவின் சகோதரர் சம்பவ இடத்திற்கு வந்த போது லால் தப்பிவிட்டார். இதையடுத்து, பொலிஸார் விரைந்து வந்து அனிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


ஆனால், வயிற்றில் இருந்த ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதன்பின்னர், பன்னா லால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது நீதிமன்றத்தில், பொய் வழக்குப் பதிவு செய்ய அனிதா தன்னைத்தானே காயப்படுத்தியதாக பன்னா லால் கூறினார். தற்போது, பன்னா லாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.