ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு மனதை உலுக்கும் சம்பவம், சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பியிருக்கிறது. ஒன்பது மாத கர்ப்பிணியான அனுஷா என்ற 27 வயது பெண், தனது கணவர் ஞானேஸ்வரால் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த கொடூரமான செயல், அனுஷாவின் குழந்தை பிறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, அரங்கேயிருக்கிறது.
அனுஷா, ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்திருந்த அவர், தனது 28 வயது கணவர் ஞானேஸ்வருடன் விசாகப்பட்டினத்தின் மதுரவாடா பகுதியில் வசித்து வந்தார்.
ஞானேஸ்வர், விசாகப்பட்டினத்தின் ஸ்கவுட்ஸ் மற்றும் சாகர் நகர் கடற்கரை பகுதிகளில் இரண்டு சிறிய உணவகங்களை நடத்தி வந்தார். இவர்கள் 2022 டிசம்பரில் காதல் திருமணம் செய்துகொண்டனர்.
ஆனால், இந்தத் திருமணத்திற்கு ஞானேஸ்வரின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால், அவர் தனது குடும்பத்திற்கு அனுஷாவை அறிமுகப்படுத்தாமல், திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தார்.
திருமணத்தின் ஆரம்ப நாட்களில் இவர்களது வாழ்க்கை சுமுகமாக இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், பின்னர் பல பிரச்சனைகள் தலைதூக்கின.
அனுஷாவின் குடும்பத்தினர் கூறுவதன்படி, ஞானேஸ்வர் தனது மனைவியை ஏதோ சில காரணங்களுக்காக பிரிய முயற்சித்திருக்கிறார். ஒரு கட்டத்தில், தனக்கு புற்றுநோய் இருப்பதாக பொய் சொல்லி, அனுஷாவை விவாகரத்து செய்யும்படி கேட்டிருக்கிறார்.
ஆனால், அனுஷா இதை நம்பாமல், அவருக்கு ஆதரவாக இருந்தார். இந்த மனக்கசப்புகள், அனுஷா கர்ப்பமான பிறகு மேலும் தீவிரமாகின.
ஏப்ரல் 14, 2025 அன்று, அனுஷாவின் குழந்தை பிறப்பு தேதி மிக அருகில் இருந்தது. அன்று காலை, அனுஷாவும் ஞானேஸ்வரும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு செக்-அப்பிற்காகச் சென்றனர்.
அப்போது மருத்துவர்கள், பிரசவ நேரம் நெருங்கிவிட்டது என்றும், அனுஷாவை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கவும் அறிவுறுத்தினர்.
ஆனால், ஞானேஸ்வர், மருத்துவமனையில் அட்மிட் செய்வதை அடுத்த நாளுக்கு தள்ளிவைப்பதாக சொல்லிவிட்டு, அனுஷாவை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.
மறுநாள் அதிகாலை 5 மணி அளவில், ஞானேஸ்வர் ஒரு கொடூரமான திட்டத்தை செயல்படுத்தினார். அனுஷா தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு துணியால் அவரது கழுத்தை நெறித்து கொலை செய்தார்.
அனுஷாவின் பாட்டி, கர்ப்ப காலத்தில் உதவியாக இருக்க, அவர்களது வீட்டில் தங்கியிருந்தார்.
காலையில், மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென பாட்டி வலியுறுத்தியபோது, ஞானேஸ்வர், “அனுஷா மயக்கமாகி விழுந்துவிட்டார்” என்று பொய் சொல்ல, உறவினர்கள் அவசரமாக அனுஷாவை அருகிலுள்ள அரிலோவா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,
ஆனால் மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
அனுஷாவின் மரணம் இயற்கையானது இல்லை என்று சந்தேகித்த அவரது குடும்பத்தினர், விசாகப்பட்டினத்தின் பிஎம் பாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறையின் ஆரம்ப விசாரணையில், அனுஷாவின் உடலில் கழுத்தை நெறித்ததற்கான அடையாளங்கள் இருப்பது உறுதியானது.
ஞானேஸ்வரை காவல்துறை கைது செய்து விசாரித்தபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தனது மனைவி தொடர்ந்து தன்னை வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியதால், ஆத்திரத்தில் கொலை செய்ததாக அவர் கூறியது போலீசாரையே அதிர வைத்தது. .
அனுஷாவின் மரணம் விசாகப்பட்டினத்தில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினரும், பெண்கள் உரிமை அமைப்புகளும், ஞானேஸ்வருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏப்ரல் 15, 2025 அன்று, கிங் ஜார்ஜ் மருத்துவமனை முன்பு, நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் வுமன் (NFIW) உள்ளிட்ட பெண்கள் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. “இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்,
ஞானேஸ்வருக்கு ஜாமீன் கிடைக்காமல் தடுக்க வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் ஞானேஸ்வருக்கு ஆதரவாக வாதிட வேண்டாமென கேட்டுக்கொண்டனர்.
அனுஷாவின் குடும்பத்தினர், இந்த இழப்பை தாங்க முடியாமல் தவிக்கின்றனர். அனுஷா, சிறு வயதில் தனது தாயை இழந்தவர், நான்கு ஆண்டுகளுக்கு முன் தந்தையையும் இழந்தவர்.
அவரது பாட்டி மட்டுமே அவருக்கு ஆதரவாக இருந்தார். இந்தக் கொலை, அவரது குடும்பத்திற்கு ஒரு மீள முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது.