கேம்……….
கொரோனா ஊரடங்கால், மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சமீப நாட்களாக செல்போன், தொலைக்காட்சி ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால், இளைஞர்களும், சிறுவர்களும் வெகுவாக பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த சில கிராமங்களில் செல்போன் கேம் விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள அத்வைத் நகர், வசாய் பய்கார் உள்ளிட்ட சில கிராமப்பகுதிகளில் இந்த நடவடிக்கை தொடர்கிறதாம். இதற்கென தனியாக செயல்படும் சமாஜ் சன்ஸ்கார் என்ற அமைப்பு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
செல்போனை பேசுவதற்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும். அதில் கேம் விளையாடினாலோ, பாட்டு கேட்டாலோ அபராதம். அதேபோல மது வாங்குதல், விற்றல் ஆகியவற்றிற்கு தடை என ஒரு பெரிய லிஸ்டே போட்டுள்ளதாம் அந்த அமைப்பு.
மேலும், முதலில் தடையை மீறினால் பஞ்சாயத்து கூட்டம் நடக்கும்போது தோப்புக்கரணம் போட வேண்டும். தொடர்ந்து அதே தவறை செய்தால் அபராதம் உள்ளிட்ட சில தண்டனைகளும் உண்டாம். இதில் வசூலிக்கப்படும் தொகையும் கிராம வளர்ச்சிக்காகவே பயன்படுத்துவதாகவும், கிராமங்களில் கட்டுப்பாடு அவசியம் என்றும் சொல்கிறார்கள் சமாஜ் சன்ஸ்கார் அமைப்பினர்.