கைது செய்வதற்கு சென்ற போலீசாரை காஸ் சிலிண்டரை திறந்து தீவைத்து கொன்றுவிடுவதாக மிரட்டிய ரவுடி!!

172

கார் டிரைவரை ஏமாற்றி பணம் பறித்த நபரை பிடிக்க சென்றபோது காஸ் சிலிண்டரை திறந்து அனைவரையும் எரித்து கொலை செய்து விடுவேன் என மிரட்டிய ரவுடியை போலீசார் மடக்கி பிடித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் மேலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (35). ரேபிடோவில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

கடந்த 22ம் தேதி இரவு நள்ளிரவு, செல்போனில் பேசிய ஒரு பெண், மணலி பகுதியிலிருந்து செங்குன்றம் வரை செல்ல வேண்டும் என கார் புக் செய்தார்.

வினோத் குமாரும் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று, அங்கிருந்த 2 ஆண்களை ஏற்றிக்கொண்டு மாதவரம் சென்றார்.

அதன் பிறகு அவர்கள் கூறியதன் பேரில் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை சாஸ்திரி நகர் பகுதிக்கு சென்றபோது வண்டியில் பயணம் செய்த இருவரும், வினோத்குமாரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த 2700 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி குறிப்பிட்ட அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.


இதையடுத்து குறிப்பிட்ட அந்த கார் டிரைவரை அழைத்துக் கொண்டு சவாரி ஏறிய இடத்திற்கு சென்று விசாரித்தபோது அவர்கள் குறிப்பிட்ட அந்த வீட்டில் இல்லை. எனவே, போலீசாரிடம் கிடைத்த சிசிடிவி கேமரா பதிவுகளை அந்த பகுதியில் உள்ள நபர்களிடம் காண்பித்தபோது அவர்கள் மணலி பகுதியில் இருப்பதாக தெரிவித்தனர்.

போலீசார் மணலி துர்கை அவென்யூ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து ராஜி (24) மற்றும் அவரது மனைவி பிரவீனா (22) ஆகிய இருவரையும் பிடித்தனர்.

அப்போது ராஜி வீட்டில் இருந்த காஸ் சிலிண்டரை திறந்து விட்டு, என்னை பிடித்தீர்கள் என்றால் அனைவரையும் சேர்த்து தீவைத்து கொன்று விடுவேன் என லைட்டரை கையில் எடுத்து வைத்துக்கொண்டு போலீசாரை மிரட்டினார். இதனால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.

சிறிது நேரத்தில் ராஜியை மடக்கிய போலீசார் அவரிடம் இருந்த லைட்டரை வாங்கி முதலில் அதனை வீட்டில் இருந்து தூக்கி எறிந்தனர். அதற்குள் ராஜி மீண்டும் அருகில் இருந்த கத்தியை எடுத்து தன்னைத்தானே வெட்டிக்கொள்ள முயன்றார். ஆனால் போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

பிறகு கணவன் -மனைவி இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் ராஜி மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 18 குற்ற வழக்குகள் இருப்பதும், சரித்திர பதிவேடு ரவுடி என்பதும் தெரிய வந்தது.

தனது மனைவியை வைத்து ராஜி கார் புக் செய்து தனது நண்பரான மணலி ராஜி என்ற நபருடன் சென்று வழிப்பறிவில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து ராஜி மற்றும் பிரவீனா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மணலி ராஜியை தேடி வருகின்றனர்.