திருச்சியில் விபரீதமாக உடம்பில் டாட்டூ குத்திய விவகாரத்தில் இளைஞர் கைதாகியுள்ள சம்பவம் தொடர்பான விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடலில் சொல்ல முடியாத இடங்களில் எல்லாம் டாட்டூ குத்திக் கொள்வது, தொப்புளில் தோடு போட்டுக் கொள்வது, கண்களில் கலரிங் செய்து கொள்வது, தலைமுடியை கீரிப்பிள்ளை போன்று வெட்டிக் கொள்வது என இளைஞர்களின் ஃபேஷன் மோகம் தற்போது தலைவிரித்தாடுகிறது.
அதிலும் வித்தியாசமாகவும், வில்லங்கமாகவும் தெரியவேண்டும் என்பதற்காக கண்களில் டாட்டூ குத்திக் கொள்வது, நாக்கை இரண்டாக பிளந்து ஆபரேஷன் செய்து கொள்வது என எல்லைமீறி செல்லும் இளைஞர்களும் இங்குதான் சுற்றி கொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில் ஒரு வில்லங்க இளைஞர் தான் திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் 25 வயதான ஹரிஹரன்.
நார்மலாக தெரிந்தால் நாலு பேர் நம்மை கவனிக்க மாட்டார்கள் என்பதால், வித்தியாசமாகத் தெரிய வில்லங்கமான வேலைகளில் இறங்கியவர் தான் இந்த ஹரிஹரன்.
என் குலசாமி ஏலியன் தான் என சூடத்தை பொறுத்தி சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்ட ஹரிஹரன் சேலத்திற்கு நேரில் சென்று ஏலியன் கோயிலில் தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார்.
கண்ட கண்ட டாட்டூக்களை குத்திக் கொண்டு கல்லூரிப்பக்கம் வரக்கூடாது என பேராசிரியர்கள் விரட்டி விட, மும்பை பக்கம் சென்றவர் அங்கும் ஒரு டாட்டூ கடையில் தான் வேலை செய்திருக்கிறார்.
ஏற்கெனவே ஃபேஷன் பைத்தியம் முற்றி தலைவிரித்தாடிய ஹரிஹரனுக்கு, மும்பை மாநகரம் முக்தியை அளித்திருக்கிறது. உச்சகட்டமாக பாம்பு, ஓணான் போன்ற உயிரிணங்களுக்கு இருப்பது போல் நாக்கை பிளந்து இரட்டை நாக்காக ஆபரேஷன் செய்து கொண்டார்.
அதுமட்டும் போதாது என்று கண்களின் வெள்ளை படலம் மீது நீல நிறத்தில் பச்சை குத்திக் கொண்ட கொடூரத்தையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்.
வித்தியாசமாகவும், வீரியமாகவும் சொந்த ஊரான திருச்சிக்கு வந்தவர், ஏலியன் டாட்டூ என்ற பெயரில் கடை விரித்து இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
பச்சை குத்தும் தொழிலுக்கு இத்தனை வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்காத அவர், நாக்கை பிளக்கும் ஃபேஷன் புரட்சிக்கு தொடர்ந்து விளம்பரம் செய்து வந்துள்ளார்.
ஃபேஷன் பேய் தலைவிரித்தாடிய பலரும் வருகை தர, ஹரிஹரனின் நண்பர் ஒருவர், நாக்கை பிளக்க நண்பருக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
இடது கையில் கத்தியையும், வலது கையில் ஊசி நூலையும் எடுத்துக் கொண்டு மருத்துவர் உடையில் மங்களகரமாக களத்தில் இறங்கியிருக்கிறார் ஏலியன் டாட்டூ ஹரிஹரன்.
வாயில் மாஸ்கை மாட்டிக் கொண்டு நண்பரின் நாக்கை நாசம் செய்த ஹரிஹரன், அதற்கு ஏழெட்டு தையல் போட்டு குத்துமதிப்பாக ஆபரேஷனை முடித்திருக்கிறார்.
தனது மருத்துவத் திறமையை இந்த உலகுக்கு காட்ட அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் நாக்கு பஞ்சர் ஆனது கூட புரிந்து கொள்ள முடியாத அந்த நண்பரும் இரட்டை விரலை தூக்கிக் வெற்றிக்குறி காட்டியிருக்கிறார்.
அடுத்து கண்ணை பஞ்சர் ஆக்குவதற்குள் யாரேனும் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா? என இன்ஸ்டா வியூவர்ஸ் கமெண்ட் பாக்சில் கழுவி கழுவி ஊற்ற அந்த ஆதங்கம் திருச்சி மாநகர கோட்டை போலீசாரின் பார்வைக்கு எட்டியுள்ளது.
அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க டாட்டூ கடைக்கு சீல் வைத்து மூடு விழா நடத்தினர்.
ஹரிஹரனை பிடித்த போலீசார் அவரிடம் எம்பிபிஎஸ் என்ற மருத்துவப்படிப்பு ஒன்று உள்ளது அது உனக்குத் தெரியுமா? எனக் கேட்டுள்ளனர்.
அதெல்லாம் எனக்குத் தெரியாது மும்பையில் தான் வேலை பார்த்த கடையில் தான் இந்த ஆபரேஷன் செயல்முறையை கற்றுக் கொண்டேன் இரண்டு நாக்கும் கூசாமல் கூறியிருக்கிறார்.
அவரிடம் தொடர்ந்து விசாரித்தபோது, ஏடாகூடமான சில தகவல்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சாதாரணமாக டாட்டூ போட மூன்றாயிரம் முதல் பத்தாயிரம் வரை வசூல் செய்துள்ளார் ஹரிஹரன்.
கை முதல் அந்தரங்க பாகங்கள் வரை மானாவாரியாக டாட்டூ குத்தி மாதம் 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வந்துள்ளார். அந்தரங்க பாகங்களில் டாட்டூ போட வேண்டும் என்றால் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறார்.
இதுவரை 3 பேருக்கு நாக்கை பிளவு படுத்தும் அறுவை சிகிச்சை செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நாக்கை இதுபோன்ற பிளவு படுத்துவது அழகுக் கலைக்குள் வராது என்றும் இது ஒரு முட்டாள்தனமான செயல் என்றும் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் என்றும் அது மருத்துவக் கொள்கைக்கு எதிரானது என்றும் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஆபரேஷனின்போது ஹரிஹரனுக்கு உதவியாக இருந்த ஜெயராமன் என்பரையும் போலீசார் கைது செய்து 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இருவரும் சிறையில் அமர்ந்து குற்றம் குறித்து சிந்திக்க நீதிமன்றத்தால் அனுமதி அளிக்கப்பட்டது. இதுபோன்ற விபரீத முயற்சிகளில் இளைஞர்கள் ஈடுபடக் கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோன்ற டாட்டு குத்திக் கொண்டால் கண்களில் பார்வை இழப்பு ஏற்படுவதுடன், பேசும் திறனும் எதிர்காலத்தில் பறிபோக வாய்ப்பிருப்பதாக மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அதிர்ச்சியூட்டும் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. கை முதல் உடலின் அந்தரங்க உறுப்புகள் வரை ஏடாகூடமாக டாட்டூ போட்டு, மாதம் 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து தெரியவந்தது.
சாதாரண டாட்டூவிற்கு பத்தாயிரம் ரூபாய் வரையிலும், அந்தரங்க உறுப்புகளில் டாட்டூ போடுவதற்கு 50 ஆயிரம் ரூபாயும் வசூலித்ததாக இளைஞர் ஹரிஹரன் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை 3 பேருக்கு நாக்கு அறுவை சிகிக்சை செய்து இருப்பதும், அவர்களின் நண்பர்களை வைத்தே, இன்ஸ்டாகிராமில் ப்ரோமோ வீடியோ பதிவிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.