திருப்பத்தூரில்..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சு (வயது 42). இவரது கணவர் கமலேசன் கடந்த 2013ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டு முதல் கமலேசன் மனைவி மஞ்சுவிற்க்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன் மகன் குப்பன் (51) என்பவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் 2018ம் ஆண்டு முதல் மஞ்சு மற்றும் குப்பன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து உள்ளனர். அதனைத் தொடர்ந்து குப்பன் மஞ்சுவிற்கு பத்து லட்சத்திற்கும் மேலாக செலவு செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அந்த பணத்தை கேட்டு அவ்வப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இதே போல் தகராறு ஏற்பட குப்பன் மஞ்சுவின் வீட்டிற்கு சென்று வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். பின்னர் வீட்டில் இருந்த மஞ்சுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அனைத்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் மஞ்சுவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மஞ்சுவை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து கந்திலி போலீசார் குப்பனை கைது செய்தனர். மேலும் குப்பண்ணுக்கும் தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.