கோடிக்கணக்கான சொத்துக்காக கணவன், மாமனாரை கொன்ற மனைவி! உதவிய நபர் யார்? திடுக்கிடும் பின்னணி தகவல்!!

944

தமிழகத்தில் கோடிக்கணக்கான சொத்துக்காக மாமனார், கணவன், மைத்துனரை கொன்ற மருமகள் மாமியாரை கடத்திய நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தற்போது சிக்கியுள்ளான்.

படப்பையை சேர்ந்த சுப்புராயன்- பத்மினி தம்பதியரின் மகன்கள் செந்தில், ராஜ்குமார். சொத்து தகராறில் கடந்த 2014ம் ஆண்டு தமது சகோதரர் ராஜ்குமாரை, செந்தில் கொலை செய்தார். அதன் பிறகு சிறைக்கு சென்ற செந்தில் சில மாதம் கழித்து தலைமறைவானார்.

அதன் பிறகு செந்திலை பற்றிய எந்த தகவலும் இல்லை. இதையடுத்து செந்திலின் மனைவி மேனகா தமது தோழியின் வீட்டில் தங்கினார். இந்நிலையில் 2018ம் ஆண்டு தோழியின் கணவரான ராஜேஷ் கண்ணாவை ஏவி, மாமனார் சுப்புராயனை மேனகா கொலை செய்துள்ளார்.

இதையடுத்து மாமியார் பத்மினி வசம் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கேட்டு மேனகா மிரட்டி வந்தார். இதனால் அச்சம் அடைந்த பத்மினி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அயனாவரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். அவரை பின்தொடர்ந்த மேனகா, கூட்டாளிகளுடன் சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டி பத்மினியை காரில் கடத்தி சென்றார்.


இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. இது தொடர்பாக மேனகா, ஜேம்ஸ், பாலமுருகன், கமலா, ரோசி, தர்மலிங்கம் ஆகியோரை அயனாவரம் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் கொலை வழக்கை போல், கடத்தல் வழக்கிலும் மூளையாக செயல்பட்ட ராஜேஷ் கண்ணாவை பொலிசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் பதுங்கியிருந்த ராஜேஷ் கண்ணாவை 7 மாதங்களுக்கு பின் பொலிசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. தம்பி ராஜ்குமாரை கொலை செய்த அண்ணன் செந்தில் வெளியே வந்த பிறகு செந்திலுக்கும் ராஜேஷ்கண்ணாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. செந்தில் மனைவி மேனகாவை ராஜேஷ்கண்ணா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த செந்தில், ராஜேஷ் கண்ணாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் செந்திலின் மாமனாரான திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அருண் என்பவரிடம் முறையிட்டுள்ளார். இதனால் அருணுக்கும் செந்திலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மேனகா, மேனகாவின் தந்தை அருண், ராஜேஷ்கண்ணா மூவரும் சேர்ந்து செந்திலை தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாகவும் அவரை செஞ்சிக்கு அழைத்து சென்று துண்டு துண்டாக வெட்டி ஒரு இடத்தில் புதைத்ததாகவும் ராஜேஷ்கண்ணா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதுவரை இந்த கொலை சம்பந்தமாக எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. செந்தில் காணவில்லை என மேனகா ஒரே ஒருமுறை புகார் மட்டும் அளித்துள்ளார்.

மற்றபடி அதற்குப்பின் எந்த தகவலும் இல்லை. செந்தில் மறைவிற்குப்பின் கேட்பதற்கு யாரும் இல்லை என்பதால் மாமியார் பத்மினியிடமிருந்து சொத்துக்களை அபகரிக்க அயனாவரத்தில் அந்தக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.