சகோதரியை ஆணவக் கொலை செய்த மகனுக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்திய தந்தை!!

251

அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் தனது சகோதரி செல்போனில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார் என்பதற்காக, உடன் பிறந்த சகோதரியை, குடும்பமே ஆணவக்கொலை செய்து அதிர வைத்திருக்கிறது.

பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமையன்று நடந்த இந்த நிகழ்வு தற்போது வெளியாகி உலகத்தையே அதிர செய்திருக்கிறது. சகோதரியின் கழுத்தை நெரித்துக் தம்பி கொலைச் செய்கிறான்.

இளம்பெண் உயிரிழந்ததை உறுதி செய்தபின்னர் வந்தமரும் மகனுக்கு தந்தை தண்ணீர் அருந்த கொடுத்து ஆசுவாசப்படுத்துகிறார். இந்த காட்சிகள் அனைத்தையும் இன்னொரு சகோதரன் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறான்.  இந்த வீடியோ வைரலான நிலையில், மொத்த குடும்ப உறுப்பினர்களையும் தூக்கில் போட வேண்டும் என்று எதிர்ப்பு குரல்கள் எதிரொலிக்கின்றன.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தோபா தேக் சிங் நகரில் வசித்து வருபவர் அப்துல் சத்தார். இவரது மகள் மரியா பீபி (22). மரியாவுக்கு, முகமது பைசல் மற்றும் ஷெபாஸ் என இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று இரவு படுக்கையறையில் மரியா இருந்த போது, அவளது மூத்த தம்பி பைசல் அங்கே வந்துள்ளான்.

உடன் மரியாவின் தாய், தந்தை, இன்னொரு சகோதரன் ஷெபாஸ் ஆகியோரும் மரியாவின் படுக்கையறைக்குள் நுழைந்துள்ளனர். தந்தை மகளின் படுக்கையில் அமர்ந்து கொள்ள, திடீரென மரியாவைத் தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சிக்கிறான் பைசல்.


அருகே அமர்ந்திருக்கும் மரியாவின் தந்தை அப்துல், முகத்தில் எந்தவிதமான சலனத்தையும் காட்டாமல் இறுக்கமாக அமர்ந்திருக்கிறார். இந்த காட்சிகள் அனைத்தையும் இன்னொரு தம்பி ஷெபாஸ் தனது செல்போனில் வீடியோவாக படம் பிடித்தபடி இருக்கிறார்.

ஒரு கட்டத்தில், பைசலை போகும்படி கூறுங்கள் என தந்தை அப்துலிடம் ஷெபாஸ் கூறுகிறார். மரியாவின் உடல் அசைவற்று இருக்கும் நிலையில், அதன் பின்னரும் வெறி தீராமல் தொடர்ந்து மரியாவின் கழுத்து பகுதியை பிடித்து, இறுக்கமாக நெரித்தபடியே பைசல் இருக்கிறார்.

பின்னர் மரியா தனது மூச்சை நிரந்தரமாக நிறுத்தி விட்டதை உறுதி செய்துக் கொண்ட பின்னர், கட்டிலில் வந்தமரும் பைசலுக்கு, அவருடைய தந்தை ஆசுவாசப்படுத்த தண்ணீர் பாட்டிலைத் தருகிறார். அதனை வாங்கி பைசல் குடிக்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், வீடியோவை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். நடத்தினர்.

இது குறித்து தோபா தேக் சிங் நகர காவல் நிலைய போலீஸ் அதிகாரி அடா உல்லா, “மரியா இயற்கையான முறையில் உயிரிழக்கவில்லை என தெரிய வந்துள்ளது. இந்த விஷயத்தில் நாங்களாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளோம். மரியாவின் சகோதரர்கள் பைசல், ஷெபாஸ் மற்றும் அவருடைய தந்தை அப்துல், ஆகியோரை கைது செய்திருக்கிறோம்.

ஷெபாஸூக்கு இந்த விவகாரத்தில் எந்தளவுக்கு தொடர்புள்ளது என்று விசாரணை நடைப்பெற்று வருகிறது. இது ஆணவ கொலை தான் என்பதற்கான சாட்சியங்கள் அத்தனையும் இருக்கிறது. வீடியோவில் ஷெபாஸின் மனைவியும் இருக்கிறார். அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலைக்கான காரணங்கள் குறித்து இன்னும் முழு விவரம் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது” என்றார்.

ஆனால், அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் மரியா தொடர்ந்து அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளதாகவும், இது குறித்து மரியாவின் சகோதரர் பைசல் அவரை எச்சரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே மரியாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று குரல்கள் உலக நாடுகளில் ஒலிக்க துவங்கியுள்ளன.