சென்னை கல்லூரி மாணவி சத்யபிரியா பரங்கிமலையில் ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கில், மாணவி சத்யபிரியாவின் தோழி விமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடைசி வரை நீதிமன்றத்தில் நேரடி சாட்சியாக உறுதியாக இருந்துள்ளார்.
அவரது சாட்சி இந்த வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு தண்டனை கிடைக்க பெரிதும் உதவியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த அக்டோபர் 2022ல் சத்தியபிரியாவின் கொலை நடந்த அடுத்த நாளே அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டார். புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த சத்தியபிரியாவின் தாயாரும் கடந்த பிப்ரவரி 2023ல் உயிரிழந்தார்.
இதன் காரணமாக தாய், தந்தை, சகோதரியையும் இழந்து சத்தியபிரியாவின் 2 சகோதரிகள் நிர்கதியாக உறவினர் வீட்டில் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பில் சத்யபிரியாவின் சகோதரிகளுக்கு ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலுக்காக இழப்பீடாக ரூ.10 லட்சத்தை தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக தொடா்பாக சிபிசிஐடி போலீசா விசாரணை நடத்தி, ரயில் முன்பாக சத்யபிரியாவைத் தள்ளிவிட்டதாக சதீஷை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதேவி முன்னிலையில் நடைபெற்று வந்தது.
காவல் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் ரவீந்திரநாத் ஜெயபால் ஆஜராகி, சதீஷ் மீதான குற்றச்சாட்டு கடுமையானது. அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதாடினாா்.
அரசுத் தரப்பு சாட்சிகள் 70 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகள் முன்வைக்கப்பட்டன. தடயவியல் ஆய்வுகளும் குற்றவாளிக்கு எதிரான ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
சதீஷ் துன்புறுத்தல் குறித்து படுகொலை சம்பவத்துக்கு 3 நாட்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மற்றும் சம்பவத்தின்போது நடந்தது குறித்தும் சத்யபிரியாவின் தோழி காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, இது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்து என்று குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வழக்குரைஞர் வழக்கை திசை திருப்ப முயன்றார்.
வழக்கில் குறுக்கு விசாரணையின்போது கேட்கப்பட்ட கேள்விகளால் அதிர்ச்சிக்குள்ளாகி, நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்த நிலையிலும் தோழி விமலா,
அவரது பெற்றோர் கொடுத்த ஊக்கத்தினால் வழக்கு விசாரணை முழுமைக்கும் அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்து நேரடி சாட்சியமாக இருந்து விசாரணைக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது.
சத்யபிரியாவை ரயில் முன் சதீஷ் தள்ளும் வீடியோ, சதீஷ் வீட்டிலிருந்து கிளம்பும் போது எடுத்த சிசிடிவி காட்சி, ரயில் நிலையத்துக்குள் நுழையும் சிசிடிவி காட்சிகளைப் பொருத்தி, சதீஷ் தான் குற்றவாளி என்பதை உறுதி செய்தது.
ரயில் நிலையத்தில் மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டபோது, அவர் மீது மற்றவர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க அவர் செல்போனில் பேசியபடியே செல்வது போல ரயில் நிலையத்திலிருந்து சென்ற காட்சிகளை அவருக்கு எதிரான சாட்சியமாக்கி இருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் அவர் செல்போனில் பேசவில்லை என்பதை தொலைத்தொடர்பு நிறுவன தகவல் மூலம் சிபிசிஐடி காவல்துறை உறுதி செய்திருக்கிறது. அனைத்து ஆதாரங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சதீஷ் குற்றவாளி என தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் சதீஷுக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்களை நீதிபதி ஸ்ரீதேவி நேற்று அறிவித்தாா். அதில், சதீஷ் மீதான குற்றத்தை அரசுத் தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
இதுபோன்ற கடுமையான குற்றங்களைச் செய்தவா்கள் மீது இரக்கம் காட்ட முடியாது. குற்றவாளி சதீஷுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றவாளியை சாகும் வரை தூக்கிலிட வேண்டும்.
மேலும், அவருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
மேலும், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்.