சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்த மாணவி: பொலிசாரிடம் சிக்கிய இரு மர்ம நபர்கள்!!

358

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில், சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு உதவித்தொகை பெற்று அமெரிக்காவில் கல்வி பயின்றுவந்த மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் தாத்ரி பகுதியில் கவுதம் புத்த நகரில் வசிக்கும் 20 வயதான சுதிக்ஷா பாட்டி என்பவரே ஆகஸ்டு மாதம் 10 ஆம் திகதி சாலை விபத்தில் கொல்லப்பட்டார்.

இந்த விவகாரத்தில் தற்போது கண்காணிப்பு கமெராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கொரோனா பரவலை அடுத்து அமெரிக்காவில் இருந்து கடந்த மாதம் ஊருக்கு திரும்பிய சுதிக்ஷா பாட்டி, சம்பவத்தன்று தமது உறவினர் ஒருவருடன் பைக்கில் பயணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் வைத்து சாலை விபத்தில் சிக்கி சுதிக்ஷா பாட்டி மரணமடைந்தார். இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இருவரின் நோக்கம் என்ன என்பது தொடர்பில் தகவல்களை பொலிசார் வெளியிட மறுத்துள்ளனர்.


சுதிக்ஷா பாட்டி பைக்கில் பயணப்பட்ட நிலையில், இருவர் அந்த பைக்கை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும், தங்களது மகள் இறக்க இதுவே காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

ஆனால் நடந்த சம்பவத்தை திசை திருப்ப குடும்பத்தினர் முயல்வதாக பொலிசார் தெரிவித்திருந்தனர். உறவினருடன் பைக்கில் செல்லவே இரு மர்ம நபர்கள் துரத்தியதாகவும், அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கவே விபத்தில் சிக்கியதாகவும் குடும்ப உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனால் பொலிசார் குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகளையும் புகார்களையும் ஏற்க மறுத்து வருவதாகவும் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.