அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் லோரீன் வில்லென்பெர்க் என்ற 66 வயது பெண்மணிக்கு 1992 ஆம் ஆண்டு ஹெச்.ஐ.வி நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தற்போது வரை ஹெச்.ஐ.வி நோய்த் தொற்றுக்கு எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிக்காத நிலையில் லோரீன் வில்லென்பெர்க் மட்டும் ஹெச்.ஐ.வியில் இருந்து உயிர் பிழைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவர் ஹெச்.ஐ.வி வைரசுடன் கடந்த 28 ஆண்டுகள் போராடி வந்ததும், லோரீன் வில்லென்பெர்க்கின் உடல் வைரஸ் கிருமியை வெல்லும் அளவுக்கு அவரின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி உருவாகியிருந்தது மருத்துவர்களின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. லோரீன் வில்லென்பெர்க்கின் இந்த நிலைக்கு காரணம் அவரின் உணவு பழக்கம் மற்றும் தன்னம்பிக்கையே என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்பு, கலிபோர்னியாவைச் சேர்ந்த டிமோதி ப்ரௌன் (Timothy Brown), லண்டனைச் சேர்ந்த ஆடம் காஸ்டில்லெஜோ (Adam Castillejo) ஆகிய இரண்டு பேர் மட்டுமே ஹெச்.ஐ.வி நோய்த் தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்தனர் என்று அறிவிக்கப்பட்டனர். இவர்கள் இரண்டு பேருமே புற்றுநோய்க்காக எலும்பு மஞ்சை மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதுகுறித்து கூறிய பீட்டர் டோஹெர்டி தொற்று நோய் மற்றும் நோய் எதிர்ப்பு நிறுவனத்தின் (Peter Doherty Institute for Infection and Immunity) இயக்குனர், மருத்துவர் ஷரோன் லெவின், ‘லோரீன் வில்லென்பெர்க் சிகிச்சை பெறாமலே ஹெச். ஐ.வி தொற்றிலிருந்து ஒருவர் குணமடைந்திருப்பது மிகவும் புதுமையானதாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.
மேலும் பல வருடங்களாக ஹெச். ஐ.வி வைரசுடன் போராடும் பல பில்லியன் மக்களுக்கு லோரீன் வில்லென்பெர்க் புதிய நம்பிக்கையாக திகழ்கிறார் என பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.