சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு : திடீர் திருப்பம் – கணவர் ஹேம்நாத் விடுதலை!!

103

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்-க்கு எந்த வித தொடர்பும் இல்லை என்று திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் சித்ரா. நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றிய இவர் விஜே சித்ரா என்றும் அறியப்பட்டார்.

சின்னத்திரையுலகில் பரபரப்பாக இயங்கி வந்த சித்ரா, நசரேத்பேட்டை அருகே உள்ள ஸ்டூடியோவில் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்ததால் அதற்கு அருகிலேயே விடுதி ஒன்றில் தனது கணவர் ஜேம்நாத் உடன் தங்கி வந்தார்.

இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் தூக்கு போட்ட நிலையில் விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர்.

சித்ராவின் கன்னத்தில் நகக்கீறல்கள் இருந்ததால் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்குமாறும் காவல் நிலையத்தில் நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் புகார் அளித்தார். இதுதொடர்பாக பல்வேறு தரப்பிலும் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையே வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சித்ராவின் தந்தை காமராஜ் மனு தாக்கல் செய்தார்.


ஆனால் 67 பேரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது, அத்துடன் வழக்கு விசாரணையை ஆறு மாத காலத்திற்குள் முடுக்குமாறு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடிகை சித்ராவின் மரண வழக்கில் இன்று (ஆகஸ்ட் 10) தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, சித்ராவின் மரண வழக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சித்ராவின் மரணத்திற்கும் அவரது கணவர் ஹேம்நாத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கூறி ஹேம்நாத்தை விடுதலை செய்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ரேவதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.