செல்போன் அழைப்பை எடுக்காத பெற்றோர் : வீட்டின் கதவை திறந்த மகன் கண்ட அதிர்ச்சி காட்சி!!

270

இந்திய மாநிலம் கேரளாவில் யூடியூப்பில் பிரபலமான தம்பதி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குமரி மாவட்ட எல்லையில் உள்ள கேரள பகுதியான செருவரகோணத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவர் தனது மனைவி பிரியாவுடன் (37) சேர்ந்து ‘Sellu Family” என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தார்.

இதன்மூலம் தம்பதியர் இருவரும் பிரபலமாகினர். இவர்களின் மகன் சேது எர்ணாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று சேது தனது பெற்றோரை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவர்கள் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் சேது உடனடியாக பெற்றோரைப் பார்க்க நேரில் சென்றுள்ளார்.

வீட்டின் முன் வாயில் உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது, ஆனால் முன் கதவு லேசாக திறந்திருப்பதை கண்ட சேது, உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.

அவரது தந்தை செல்வராஜ் தூக்கில் தொங்கிய நிலையிலும், தாய் பிரியா படுக்கையிலும் இறந்து கிடந்துள்ளார்.


இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றினர். அவர்களில் பிரியா விஷம் அருந்தி உயிரிழந்தது பின்னர் தெரிய வந்தது.

தம்பதியரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, நடந்த முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையில் இருந்த இருவரும், யூடியூப்பில் வருமானம் போதிய அளவில் இல்லாததால் வருத்தத்தில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும், யூடியூப்பில் எதிர்மறை கருத்துக்கள் வந்ததால் மனம் உடைந்த தம்பதி இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இருவரின் மரணத்திற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.