ஒடிசாவில்..
ஒடிசா மாநிலம் சக்கப்பாட் பகுதியில் கடந்த நவம்பர் 6ம் தேதி, தன்னுடைய அக்காள் காணாமல் போனதாக சகோதரன், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார், மாயமான இளம்பெண்ணைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், போலீசாரின் விசாரணையின் போது அருகில் உள்ள வனப்பகுதியில் அழுகிய நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்த இளம்பெண் பலரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கோடாரியால் வெட்டப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போதும், கொலையான பெண் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்த பெண் என்பதனை அறிந்தனர்.
வேறு கூடுதல் தகவல் எதுவும் கிடைக்காத நிலையில், தன்னுடைய அக்காள் காணாமல் போனதாக புகார் அளித்த சகோதரனின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதை போலீசார் அறிந்தனர். பின்னர் சகோதரனைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
சகோதரனுக்கும், அவரது அண்ணி முறையிலான பெண் ஒருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது இளைஞனின் அக்காவுக்கு தெரிய வந்துள்ளது. தகாத உறவு என்று, தனது தம்பியிடம் இதனை விட்டுவிடுமாறு அறிவுரை கூறியுள்ளார்.
ஆனால் அவர்களது உறவு தொடர்ந்ததால், வீட்டில் உள்ளவர்களிடம் இது குறித்து கூறி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், கடந்த நவம்பர் 3ம் தேதி, தனது சகோதரி வீட்டின் அருகே உள்ள வனப்பகுதிக்கு விறகுகள் சேகரிக்க செல்வதை அறிந்து அவரும் மாடுகளை மேய்க்க அங்கு சென்றுள்ளார்.
பின்னாலேயே தனது நண்பர்கள் 4 பேரை வனப்பகுதிக்கு வரவழைத்த இளைஞர், அவர்களுக்கு மது வாங்கி கொடுத்துள்ளார். பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து சகோதரியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, அவரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இதன் பின்னர் 3 நாட்கள் கழித்து ஒன்றும் தெரியாதது போல் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததோடு, போலீசாரோடு சேர்ந்து சகோதரியைத் தேடுவது போல நடித்து வந்துள்ளார்.
இந்த தகவல்கள் கிடைத்ததை அடுத்து, அந்த இளைஞர் உட்பட 5 பேரையும் கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகாத உறவைத் தட்டிக்கேட்ட சொந்த சகோதரியை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து சகோதரனே கொலை செய்த சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.