சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்… ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் மரணம்!!

219

புத்தாண்டு தினத்தில் துயர சம்பவமாக நேற்று மதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தவறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஐராவதநல்லூர் அடைக்குளம் பிள்ளை காலனியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி கார்த்திகாதேவி (30)

மதுரையில் நகைக்கடை உரிமையாளரான செல்வகுமார் தனது மனைவி கார்த்திகாதேவி மற்றும் குழந்தைகள் அடங்கிய 13 பேர் கொண்ட குழுவினராக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாட மதுரையில் இருந்து திருவனந்தபுரம் சென்றுள்ளனர்.

அவர்கள் ரயிலில் எஸ் 3 கோச்சில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில் தங்களது கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு மதுரை திரும்புவதற்காக ரயிலுக்காக பிளாட்பாரம் 3ல் காத்திருந்துள்ளனர்.

ஆனால் ரயில் அந்த பிளாட்பாரத்திற்கு வராமல் மற்றொரு பிளாட்பாரத்திற்கு வந்துள்ளது. குடும்பத்தினர் 13 பேரும் அவசர அவசரமாக ரயில் செல்வதைப் பார்த்து ஓடிச்சென்று ரயிலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் கார்த்திகா ரயிலில் ஏறும் போது வழுக்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக கார்த்திகா தேவியின் உறவினர்கள் அலறிய சப்தம் கேட்டதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.


இது குறித்து தும்ப போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திகா தேவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு 7.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.