சீனாவில்..
ஒரு நாள் முதல்வர் போல் சீனாவில் ஒரு நாள் திருமணம் ட்ரெண்டாகி வருகிறது. உலகம் முழுவதிலும் பல விநோத நடைமுறைகளுக்கு முன்னோடியாக இருந்து வருவது சீனா தான்.
அந்த வகையில் ஒருநாள் திருமணம் எனும் புது வகையான கலாச்சார நடைமுறை தற்போது சீனாவில் பரவி வருகிறது.சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் இருக்கும் கிராமங்களில் ஒரு நாள் திருமணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இதற்கு காரணம் அங்கு கடைபிடிக்கப்படும் நடைமுறை தான். ஏழ்மை காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஆண்கள், திடீரென உயிரிழந்தால் அவர்களின் குடும்ப கல்லறையில் அவர்களின் சடலங்களைப் புதைக்க முடியாது.
இதனால் அவர்களால் மூதாதையருடன் சொர்க்கத்தில் சேர முடியாது என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இதனால் பாவங்கள் ஏற்படும். இந்த பாவம் பல தலைமுறைகளுக்கும் தொடரும் என்பது அந்நாட்டு மக்கள் நம்பிக்கை.
இதன் காரணமாக, இறந்த பின்பும் தங்கள் மூதாதையருடன் ஒன்று சேர வேண்டும் என்றால் அனைத்து ஆண்களுக்கும் கட்டாயம் திருமணமாகி இருக்க வேண்டியது அவசியம்.
இம்முறையில் திருமணம் செய்து கொள்பவர்கள் தங்களுக்கு திருமணம் நடந்து விட்டதை மூதாதையர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அவர்களின் குடும்ப கல்லறைக்கு செல்வார்கள். உள்ளூர் பெண்கள் இப்படி ஒருநாள் திருமணம் செய்ய தயங்குவதால்,
வெளியூரில் இருந்து ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து பெண்கள் பணத்திற்காக வந்து திருமணம் செய்து கொள்கிறார்கள் . இதற்கு தனிப்பட்ட திருமண தரகரும் உண்டு. திருமணமான பல பெண்களும் அவர்களின் குடும்பத்தினருக்கே தெரியாமல் இது போன்ற ஒருநாள் திருமணங்களை செய்து கொள்ள முன்வருகிறார்கள்.
இந்த திருமணங்கள் எதுவுமே சட்டப்பூர்வமானவை கிடையாது. சடங்கிற்காக மட்டுமே செய்யப்படுகின்றன. திருமணம் முடிந்த மறுநாள் நீ யாரோ, நான் யாரோ என பிரிந்து சென்று விடுகின்றனர்.