திருப்பதி, திருமலையில் தரிசனத்திற்காக குடும்பத்தினருடன் சென்றிருந்த நிலையில், தங்கும் விடுதியின் மாடியில் இருந்து 3 வயது சிறுவன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவரது மனைவி கிருஷ்ணவேனி. இந்த தம்பதியர் தங்களது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனத்திற்காக கடந்த ஜனவரி 13ம் தேதி இலவச சர்வ தரிசன டோக்கன் பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு ஜனவரி 16ம் தேதி சாமி தரிசனம் செய்ய டோக்கன் வழங்கப்பட்டதால், திருப்பதி திருமலையிலேயே காத்திருந்தும், திருமலை பாலாஜி பேருந்து நிலையத்தின் அருகேயுள்ள பத்மநாப நிலையம் யாத்திரிகள் சமுதாய கூடம் 5ல் முதல் மாடியில் தங்கியிருந்தனர்.
பின்னர் தலைமுடி காணிக்கை செலுத்துவதற்காக சென்று, மொட்டையடித்து விட்டு, குளித்து சாமி தரிசனம் செய்ய தயாராக காத்திருந்தனர்.
அப்போது முதல் மாடியில் உள்ள வராண்டாவில் ஸ்ரீனிவாஸ் 3 வயது மகன் சாத்விக் ஸ்ரீனிவாச ராஜு, தனது அண்ணன் ஸ்ரீநிஹாந்த்துடன் விளையாடிக் கொண்டிருந்த போது முதல் மாடியில் இருந்த கிரில் வழியாக தவறி கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக சிறுவனை திருமலை அஸ்வினி மருத்துவமனைக்கு பதறியடித்தப்படி பெற்றோர் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபகாலங்களாக திருப்பதி திருமலையில் லட்டுப் பிரச்சனையைத் தொடர்ந்து, இலவச டோக்கன் விநியோகத்தின் போது விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக லட்டு விநியோகிக்கும் கவுண்டரில் தீ விபத்து ஏற்பட்டத்தைத் தொடர்ந்து இப்போது விடுதியில் சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.