தண்டனையில் இருந்து தப்பிக்க போலி இறப்பு சான்றிதழ்: ஒரேயொரு எழுத்துப்பிழையால் சிக்கிய குற்றவாளி!!

1014

அமெரிக்காவில் சிறைத் தண்டனையில் இருந்து தப்பிக்க இறந்துவிட்டதாக இறப்பு சான்றிதழ் தயார் செய்தும் எழுத்துப் பிழையால் குற்றவாளி சிக்கியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த 25 வயது ராபர்ட் பெர்கர் என்ற இளைஞர், லொறி திருட்டு உள்ளிட்ட சில வழக்குகளில் சிக்கியுள்ளார்.

தற்போது 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த நிலையில் லொறி திருட்டு தொடர்பாக மீண்டும் வழக்கு வந்துள்ளது.

தனக்கு மீண்டும் சிறைத்தண்டனை கிடைக்கப்போகிறது என்பதை உணர்ந்த இளைஞர், தான் இறந்துவிட்டதாக இறப்பு சான்றிதழ் ஒன்றையும்ட் தயார் செய்து தன்னுடைய வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.


பல விடயங்களை சரிபார்த்து போலி இறப்பு சான்றிதழ் தயாரித்தவர் ஒரு வார்த்தையில் கோட்டைவிட்டுள்ளார்.

Registry என டைப் செய்வதற்கு பதிலாக Regsitry என டைப் செய்து கொடுத்துவிட்டார்.

இறப்பு சான்றிதழை பரிசோதித்த நீதிமன்றம் எழுத்துப்பிழையால் சந்தேகம் அடைந்தது. பின்னர் தீவிரமாக சோதனை செய்யப்பட்டதில் எழுத்துவடிவம் எல்லாம் மாறுபட்டிருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து போலி என நீதிமன்றம் கண்டுபிடித்தது. எழுத்துப்பிழையால் சிக்கிக்கொண்ட குற்றவாளி தற்போது மீண்டும் சிறைத் தண்டனையை அனுபவிக்க உள்ளார்.

இவருக்கான அடுத்த நீதிமன்ற விசாரணையானது ஜூலை 29 ஆம் திகதி என அறிவித்துள்ளனர். மட்டுமின்றி பிணைத் தொகையாக ஒரே ஒரு டொலர் மட்டுமே எனவும் நீதிபதி முடிவு செய்து அறிவித்துள்ளார்.