கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் மளிகை கடையில் பெண்ணிடம் தாலிச் செயினை பறித்த இளைஞர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியானது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரது கூட்டாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (23) என்கிற ராசு. இவரும் கோவை புலியகுளம், எரிமேடு பகுதியை சேர்ந்த திலீப் மேத்யூ (22) என்பவரும் கடந்த சில மாதங்களாக நண்பர்களாக பழகி வந்தனர்.
இதில் ராஜேஷ் என்கிற ராசு முன் கூட்டியே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தார் என கூறப்படுகின்றது. அப்போது ராஜேஷ் மற்றும் திலீப் மேத்யூ இருவரும் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட முடிவு செய்தனர்.
செயின் பறிப்பு: அன்னூரை அடுத்து உள்ள ஜீவா நகர் பகுதியை சேர்ந்த தனலட்சுமி (55) என்பவர் நடத்தி வரும் மளிகை கடைக்கு கடந்த 22ஆம் தேதி (புதன்கிழமை) மதியம் ராஜேஷ், திலீப் மேத்யூ சென்றனர்.
அப்போது திலீப் மேத்யூ இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்து உள்ளார். பின் புறமாக அமர்ந்து வந்த ராஜேஷ் கடைக்குள் திடீரென சென்று மளிகை கடை உரிமையாளர் தனலட்சுமியிடம் சிகரெட் வேண்டும் என கேட்டு உள்ளார்.
தாலி சங்கிலி பறிப்பு: தனலட்சுமியின் கவனம் வேறுபுறம் திரும்பிய நிலையில் அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் தாலிச் சங்கிலியை ராஜேஷ் பறித்து விட்டு இருசக்கர வாகனத்தில் இருவரும் தப்பிச் சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னூர் போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை வைத்தும், வாகன சோதனை நடத்தியும் விசாரணை நடத்தி வந்தனர்.
கொள்ளையன் கைது: இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் தனியாக சுற்றி வந்த போது வாகன சோதனையில் ஈடுபட்ட தனிப்படை போலீசாரிடம் திலீப் மேத்யூ சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தனலட்சுமியிடம் இருவரும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. செயினை விற்றுவிட்டு கிடைத்த பணத்தில் பெங்களூர் சென்று உல்லாசமாக இருந்து விட்டு மீண்டும் கோவை திரும்ப திட்டமிட்டுள்ளார்.
ரயில் பயணத்தில் மரணம்: இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கோவை நோக்கி வந்த ரயிலில் ராஜேஷ் பயணித்ததும் , தலைக்கேறிய மதுபோதையில் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து பலியானதும் தெரிய வந்தது. தொடர்ந்து திலீப் மேத்யூவிடம் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய டியூக் பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திலீப் மேத்யூவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அன்னூர் போலீசார் அடைத்தனர். தாலியை அறுத்த 2வது நாளில் ராஜேஷ் பலியானது குறிப்பிடத்தக்கது.