தண்டவாளத்தில் சிக்கிய காதலியை மீட்க முயன்றதில் காதலனுக்கு நேர்ந்த சோகம்!!

42

கடந்த 4 தினங்களுக்கு முன்பு சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூரில் ரயில் முன்பு பாய்ந்து காதலர்கள் தற்கொலைச் செய்துக் கொண்டதாக செய்தி வெளியாகி இருந்த நிலையில்,

போலீசாரின் விசாரணையில் காதல் ஜோடி தற்கொலைச் செய்துக் கொள்ளவில்லை என்றும், தண்டவாளத்தில் காதலர்கள் நடந்து சென்றுக் கொண்டிருக்கையில், தண்டவாளத்தில் சிக்கிய காதலியைக் காப்பாற்ற முயன்றதில் காதலனும் ரயில் மோதி உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் சடலமாக கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ரயில்வே போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர்கள் யாரென நடத்தப்பட்ட விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் (25) மற்றும் சிதம்பரத்தைச் சேர்ந்த ஆதிலட்சுமி (23) என்பது தெரிய வந்தது. இருவரும் ஒரே கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்த காலம் முதலே காதலித்து வந்துள்ளனர்.


கடந்த ஆண்டு படிப்பை முடித்து விட்டு சில மாதத்துக்கு முன்பு இருவரும் சென்னையில் வேலை செய்வதற்காக வந்தனர். பெருங்களத்தூர் பகுதியில் தனித்தனியாக அறை எடுத்து தங்கி இருந்தபடியே இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு அரசு பேருந்து மூலம் பெருங்களத்தூர், இரணியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கி தாங்கள் தங்கி இருக்கும் அறைகளுக்கு செல்வதற்காக பேசிக் கொண்டே பெருங்களத்தூர் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்துள்ளனர்.

அப்போது ஆதிலட்சுமி தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. காதலியைக் காப்பாற்ற முயன்றதில் விக்ரமும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்துக் கொண்டிருந்த மின்சார ரயிலில் மோதி தூக்கி வீசப்பட்டதில், படுகாயம் அடைந்த இருவருமே அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.